/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பட்டாதாரர்களின் நிலத்தை மீட்க அளவை பணி; பந்தலுார் கடலக்கொல்லியில் பரபரப்பு
/
பட்டாதாரர்களின் நிலத்தை மீட்க அளவை பணி; பந்தலுார் கடலக்கொல்லியில் பரபரப்பு
பட்டாதாரர்களின் நிலத்தை மீட்க அளவை பணி; பந்தலுார் கடலக்கொல்லியில் பரபரப்பு
பட்டாதாரர்களின் நிலத்தை மீட்க அளவை பணி; பந்தலுார் கடலக்கொல்லியில் பரபரப்பு
ADDED : ஆக 20, 2025 12:29 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே கடலக்கொல்லி கிராமத்தில் பட்டாதாரர்களின் நிலம், தனியார் வசம் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நில அளவை செய்யும் பணி துவக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 20 அம்ச திட்டத்தின் கீழ், கடந்த, 1976ம் ஆண்டு, பந்லுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, சிவன், பிச்சை, செல்லையா, ஆண்டி, ஆறுமுகம், வேலுசாமி, மெய்யன், லட்சுமணன், சங்கரப்பிள்ளை, ராமச்சந்திரன் ஆகிய விவசாயிகளுக்கு, கடலக்கொல்லி கிராமத்தில் தலா ஒரு ஏக்கர் வீதம், மாநில அரசின் சார்பில் நிலம் வழங்கப்பட்டது.
அதே ஆண்டு, நவ., 19ஆம் தேதி அப்போதைய மாவட்ட கலெக்டர் இன்பசாகரன் பயனாளிகளுக்கு நில பட்டா வழங்கினார். பட்டாக்களை பெற்ற பயனாளிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது, குறிப்பிட்ட நிலம், தனியார் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், பயனாளிகளை உள்ளே செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பயனாளிகள் புகார் கொடுத்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். காலப்போக்கில் நிலப்பகுதியில் பலரும் தேயிலை, காபி விவசாயம் செய்துள்ளதுடன், குடியிருப்புகள் மற்றும் அரசின் சார்பில் சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையங்களும் செயல்ப்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிமன்றம் விசாரணை நடத்தி கடந்த, 1989ம் ஆண்டு உயர் நீதிமன்றம், பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தை, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு கடந்த, 6ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டு, பட்டா பெற்றவர்களின் வாரிசு தாரர்களுக்கு நிலத்தை நில அளவை செய்து ஒப்படைக்க, கூடலுார் நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்ற அமீனா நியமிக்கப்பட்டார்.
நிலம் அளவிடும் பணி தற்போது,பட்டா பெற்றவர்களில் பிச்சை, ராமச்சந்திரன், மெய்யன், சிவன், முருகேசன் ஆகியோரின் வாரிசுதாரர்கள் மட்டும் உள்ளனர். இந்நிலையில், நேற்று நீதிமன்ற அமீனா செரீனா, பயனாளிகள் சார்பிலான வக்கீல் கிருஷ்ணகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, தாமோதரன் முன்னிலையில் நில அளவையர், தினேஷ், வி.ஏ.ஓ. செபீர், உதவியாளர் குமார் ஆகியோர் நில அளவை செய்தனர்.
வக்கீல் கிருஷ்ணகுமார் கூறுகையில்,''இந்த நிலம் தொடர்பான வழக்கின் படி, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் நிலம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்பு நிலங்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், 20- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.