/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சதுப்பு நில ஆக்கிரமிப்பு! மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மீட்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தல்
/
சதுப்பு நில ஆக்கிரமிப்பு! மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மீட்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தல்
சதுப்பு நில ஆக்கிரமிப்பு! மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மீட்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தல்
சதுப்பு நில ஆக்கிரமிப்பு! மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மீட்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தல்
ADDED : ஜன 22, 2025 11:49 PM

ஊட்டி; வட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதை வருவாய் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சதுப்பு நிலங்கள் உள்ளன. இந்த சதுப்பு நிலங்கள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரியில் பல இடங்களில் அரசின் புறம்போக்கு நிலம்; சதுப்பு நில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
நடவடிக்கை அவசியம்
குறிப்பாக, ஊட்டி, கோத்தகிரி, குந்தா தாலுகா பகுதிகளில் அதிகளவில் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதில், கோத்தகிரியில் 'ரைபிள் ரேஞ்ச்' பகுதியில், பல ஏக்கர் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகவும், 'பார்க்கிங்' பகுதியாகவும் மாற்றப்பட்டள்ளதாக, சூழல் அமைப்பினர் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
குந்தா பகுதியில் மின்வாரிய குடியிருப்பை ஒட்டி உள்ள சதுப்பு நிலத்தில் அணையின் சகதிகளை கொட்ட மின்வாரியம் திட்டமிட்டு இருப்பதை அறிந்த சுற்றுச்சூழல் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப் பகுதியில் சகதியை கொட்டினால் சதுப்பு நிலம் பாதிப்படையும். பல்வேறு பறவைகளின் வாழ்விடம் அழிந்து போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் கொட்டி மைதானமாக மாற்றம்
இதேபோல, ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் பல ஏக்கர் சதுப்பு நிலத்தில் மண் கொட்டப்பட்டு மைதானம் போல மாறி வருகிறது. அப்பகுதியில் புதர் சூழ்ந்து அவல நிலையில் உள்ளது. இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குந்தா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பெள்ளியப்பன் கூறுகையில், ''சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக கூறி, சமீபத்தில் சில கிராமங்களில் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கினர்.
இதே போன்று நீண்ட காலமாக அரசு சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியவர்களையும், அரசு நிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். சதுப்பு நிலங்களை மீட்டு எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் இதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்,'' என்றார்
புகார் அளித்தால் நடவடிக்கை
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், ''சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து வரும் புகாரை வருவாய் துறையினர் உடனடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோத்தகிரி, ஊட்டி, குந்தாவில் சதுப்பு நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வருவாய் துறையினருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தால், அதனை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

