/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லஞ்ச வழக்கில் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
/
லஞ்ச வழக்கில் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : அக் 30, 2024 06:51 AM
ஊட்டி : இயற்கை மரணத்திற்கான காசோலை வழங்க லஞ்சம் வாங்கிய தாசில்தார், தற்காலிக இளநிலை உதவியாளர் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த நாராயணன், இவரது தந்தை ஆலுகுட்டி மரணமடைந்ததை அடுத்து, சமூக பாதுகாப்பு திட்டத்தில் கீழ், இயற்கை மரணத்துக்கான தொகை பெற குந்தா தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
உதவி தொகைக்கான காசோலையை பெற சென்றபோது, அப்போது தாசில்தாராக பணிபுரிந்த கனகம்,58, தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி,56, ஆகியோர் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாராயணன், ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன தடவிய பணத்தை நாராயணனிடம் கொடுத்து அனுப்பினர்.
தாசில்தார் கனகத்திடம், 1000 ரூபாய், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரியிடம், 500 ரூபாய் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கடந்த, 2010ம் ஆண்டு நவ., 1ம் நடந்த சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, ஊட்டி மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட கனகம், சாஸ்திரிக்கு தலா, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இருவரையும், போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.