/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவாலா பகுதியில் தார் கலவை ஆலைக்கு 'சீல்'
/
தேவாலா பகுதியில் தார் கலவை ஆலைக்கு 'சீல்'
ADDED : ஆக 04, 2025 07:53 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியில், ஒப்பந்ததாரர் ராயின் என்பவருக்கு சொந்தமான தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது.
இதிலிருந்து எழும் புகையால் இதனை ஒட்டி உள்ள போக்கர் காலனி மற்றும் தேவாலா சுற்றுவட்டார பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம், 28ஆம் தேதி, ஆலையின் உள்பகுதியில் அதிக அளவு ஜல்லிக்கற்களை கொட்டி வைத்ததால், அதன் பாரம் தாங்காமல் அதனை ஒட்டி இருந்த ஆலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்தது.
அதில், இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டதுடன், மேலும் பல வீடுகளும் பாதிக்கும் வகையில் சுவர் விரிசல் அடைந்து காணப்படுகிறது.
அப்போது, 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தார் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்,' என, வலியுறுத்தி, பல அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற தொடர் போராட்டம் தேவாலா பகுதியில் நடந்தது.
'இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, எம்.எல்.ஏ., ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிட மணி தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில், இன்று காலை பாதுகாப்பு சுவர் இடிந்த பகுதியில், மீண்டும் சுவர் கட்டும் பணியில் ஆலை உரிமையாளர் ஈடுபட்டார். அப்போது, கிராம மக்கள், அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து தேவாலா பகுதியில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று மாலை கூடலுார் தாசில்தார் முத்துமாரி, டி.எஸ்.பி., ஜெயபாலன், கமிஷனர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆலைக்கு 'சீல்' வைத்தனர்.
கமிஷனர் சக்திவேல் கூறுகையில், ''ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அவரின் உத்தரவு செயல்படுத்தப்பட்டது,'' என்றார்.