/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரோட்டிலேயே நின்று 'டாட்டா' காட்டும் பஸ்கள்
/
ரோட்டிலேயே நின்று 'டாட்டா' காட்டும் பஸ்கள்
ADDED : பிப் 14, 2024 11:42 PM

சூலூர், -அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், சூலூர் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் பஸ்கள் ரோட்டிலேயே நின்று செல்கின்றன.
திருப்பூர், பல்லடம், காங்கயம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் முக்கிய பகுதியாக சூலூர் உள்ளது. சுற்றுவட்டாரத்தில், நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலரும் வெளியூர் செல்ல, சூலூர் வருகின்றனர்.
இதுதவிர பல்வேறு தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பலரும், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்ல ஏராளமான மாணவ, மாணவிகள் சூலுார் வருகின்றனர். எனவே, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் வந்து செல்லும் இடமாக சூலூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. சூலூர் வழியாக, தினமும், 200க் கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
இவற்றில் பெரும்பாலான பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ்கள் திருச்சி ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ் ஸ்டாண்டுக்கு டாட்டா காட்டி விட்டு சென்று விடுகின்றன.
இதனால், பஸ் ஸ்டாண்டுக்குள் காத்திருக்கும் பயணிகள் மட்டுமின்றி, பயணிகளை நம்பி கடை நடத்தி வரும் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைகின்றனர்.
முன்பு இரவு நேரத்தில் தான் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வராமல் சென்று வந்தன. தற்போது, பகல் நேரத்திலும் வருவதில்லை.
போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார், பேரூராட்சி நிர்வாகம் என, யாருமே கண்டுகொள்வதில்லை. பஸ்சுக்காக வெயில், மழையில் ரோட்டிலேயே காத்திருக்க வேண்டி உள்ளது. ரோட்டில் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு, பேரூராட்சி வருவாய், வியாபாரிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல, அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

