/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
/
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
ADDED : ஜூலை 02, 2025 09:27 PM

மாநில அரசின் பொதுப்பணித்துறை வாயிலாக, அரசு துறைகளை சார்ந்த கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு பணிகளுக்கான திட்டங்களுக்கு இடம் தேர்வு செய்து தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த காலங்களில் பல்வேறு அரசு துறைகளின் கீழ், 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பொதுப்பணி துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடங்களின் பராமரிப்பு பணிகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது.
பராமரிப்பில்லாத கட்டடங்கள்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள்; அரசு தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அதில், பல இடங்களில் அரசு ஊழியர்கள் குடியிருக்கும் கட்டடங்களும் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளன. அதில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அரசு தேயிலை தோட்ட நிறுவனத்துக்கு (டான்டீ) சொந்தமான பல குடியிருப்புகள், தேயிலை தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் வன விலங்குகளின் குடியிருப்பாக மாறி உள்ளன.
புதர் மண்டி கிடக்கும் அவலம்
இதனை மக்களுக்கு பயன்படும் வகையிலான திட்ட செயல்பாடுகளுக்கு மாற்ற அரசு துறையினருக்கு நேரம் இல்லை. மாவட்டம் முழுவதும் இது போன்று, 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் வீணாகி கிடப்பது குறித்து பெயரளவுக்கு கூட, மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டதாக தெரியவில்லை. மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட இத்தகைய அரசு கட்டடங்கள், புதர்மண்டி வீணாகி போகும் நிலையில், அதனை பயன்படுத்த அரசு துறைகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
காட்டு செடிகளுக்கு மத்தியில் குட்டி சுவராக போய், மண்ணோடு மண்ணாகி வருவது, நம் மக்களின் வரி பணம் தான் என்பதை அதிகாரிகள் மறந்து விடுகின்றனர். இதனால், பல்வேறு வகையில் நாம் செலுத்தும் வரிப்பணம் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகி வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரி ரமேஷ் கூறுகையில்,''பொதுப்பணித்துறை வாயிலாக, அரசு துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டடங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது, கூடலுாரில், 1.2 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கழிப்பிட கட்டடங்கள் பணிகள் நிறைவு பெற்றும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
அதேபோல், கோத்தகிரியில், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டடம், கூடலுாரில் புளியம்பாறை, எருமாடு பகுதிகளில் பள்ளி வகுப்பறை பணிகள்,8 கோடி ரூபாயில் நடந்துள்ளன. மாவட்டத்தில் புதர் மண்டி கிடக்கும் அரசு கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
கூடலுார்
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பேராசிரியர்கள் தங்குவதற்கு கட்டடம் கட்டப்பட்டு, 2020ல் திறக்கப்பட்டது. இதுவரை இந்த கட்டடம் எந்த பயன்பாடும் இன்றி காணப்படுகிறது. அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு (டான்டீ) சொந்தமான நடுவட்டம் பாண்டியர், நெல்லியாளம், சேரங்கோடு, பாண்டியார் தோட்டங்களில் அலுவலகம் மற்றும் கள ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட பல கட்டடங்கள் பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது. இதனை, சீரமைத்து சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாக மாற்றினால் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
தேவாலா பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், அலுவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பராமரிப்பின்றி தற்போது பயனற்று சேதமடைந்து காணப்படுகிறது. வனத்துறைக்கு சொந்தமான கட்டடங்கள், வேட்டை தடுப்பு முகாம்கள் பயனற்று பராமரிப்பின்றி உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தின் கீழ் பகுதியில், நிவாரண மையம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில், இந்த மையத்தில் பேரிடர் நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக, இந்த குறிப்பிட்ட கட்டடம் பராமரிக்கப்படாமல், அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதேபோல, கோத்தகிரி நகரில் பல கட்டடங்கள் வீணாகி வருகின்றன. இவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும்.
பந்தலுார்
பந்தலுார் பகுதியில், அரசு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் மட்டும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் பயன் இல்லாமல் பாழடைந்து வருகிறது. 'டான்டீ' அலுவலர்கள் குடியிருப்பு, வீணாகி வரும் நிலையில், அவற்றை பராமரித்து கள மேற்பார்வையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் பயனாக இருக்கும்.
மேலும், கார்டன் மருத்துவமனை கட்டடங்கள் செயல்பாடின்றி அலுவலகமாக மாற்றப்பட்டது. தற்போது, சுகாதார துறைக்கு இந்த கட்டடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் செயல்படாமல் வீணாகி வருகிறது. வனத்துறை அலுவலர்கள் மற்றும் வனவிலங்கு மீட்பு பணிகளின் போது வரும் டாக்டர்கள் தங்குவதற்கு இடம் இல்லாத நிலையில், இடியும் நிலையில் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள ஓய்வு விடுதியை அகற்றி, அனைத்து வசதிகளுடன் வனத்துறை சார்பில் ஓய்வுவிடுதி கட்டினால் பயனாக இருக்கும்.
-நிருபர் குழு-