தேயிலை மகசூலை உயர்த்தும் சாகுபடி முறை தேயிலை வாரியம் அறிவுரை
தேயிலை மகசூலை உயர்த்தும் சாகுபடி முறை தேயிலை வாரியம் அறிவுரை
ADDED : செப் 13, 2026 07:02 PM
குன்னூர்:
தரமான தேயிலை உற்பத்திக்காக இந்த மாத பசுந்தேயிலை மகசூலை உயர்த்த பின்பற்ற வேண்டிய சாகுபடி முறைகளை தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் பசுந்தேயிலை மகசூல் பாதித்துள்ளது.
அதிகப்படியான வெப்பம் அல்லது நாள்பட்ட ஈரப்பதம் சிவப்பு சிலந்தி தாக்குதலுக்கு காரணமாகிறது.
இந்திய தேயிலை வாரியம் தரமான தேயிலை உற்பத்தி மற்றும் ஆர்த்தோடாக்ஸ் ரக தேயிலை தூள் உற்பத்தியை ஊக்குவிக்க இந்த மாத பசுந்தேயிலை சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து தெரிவித்துள்ளது.
இதில், கொப்புள நோய் காணப்படும் தேயிலை செடியில் காப்பர் ஆக்சி குளோரைடு, ஹெக்ஸாகோனசால் கலவையை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
மண்ணில் போதுமான ஈரப்பதம் கிடைத்ததும், 2வது தவணை உரமிடும் பணியை தொடங்க வேண்டும்.
வறட்சியால் ஈரப்பதம் குறைவாக உள்ள தேயிலை தோட்டங்களுக்கு யூரியா, மியூரேட் ஆப் பொட்டாஷ், கிரீன் மிராக்கிள் கலந்து இலை வழியாக தெளிக்க வேண்டும், என அறிவுரை வழங்கியுள்ளது.
வாரிய செயல இயக்குனர் பரணிகுமார் கூறுகையில்,
இயந்திர அறுவடையை தவிர்த்து கை அல்லது கத்திரியால் இலைகளை பறிப்பது; போதிய மழை, ஈரப்பதம் கிடைத்த பிறகே இரண்டாம் பருவ கவாத்து பணிகளை துவங்குவது; வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் நிழல் மர கிளைகளை வெட்டுவது அவசியம்.
நாற்றாங்கால் மற்றும் தேயிலை செடிகளில் கொப்புள நோய், சிவப்பு சிலந்தி, புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சாண மற்றும் பூச்சிகொல்லிகளை பயன்படுத்த வேண்டும். என்றார்.
