ADDED : ஜன 06, 2026 06:12 AM

கூடலுார்: 'கூடலுார்- ஊட்டி -மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார், மைசூரு -ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இச்சாலையில், ஊசிமலை - தொரப்பள்ளி இடையே உள்ள, 16 கி.மீ., துாரமுள்ள சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கை இல்லை.
சேதமடைந்த பகுதிகளில், அவ்வப்போது பாறைப்பொடி கலந்த ஜல்லி கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், சேதமடைந்த, பகுதிகளை மட்டும் தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் துவங்கியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரையிலான, 13 கி.மீ., துாரமுள்ள சாலையில், சேதமடைந்த பகுதிகள், 5.23 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. பணிகள் தரமாக மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து, 2027ல் இப்பகுதி சாலை முழுமையாக சீரமைக்கப்படும்,' என்றனர்.
