/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை அளவு அதிகம்! நீர்மட்டம் உயர்வால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை; வெயில் இல்லாததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
/
மழை அளவு அதிகம்! நீர்மட்டம் உயர்வால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை; வெயில் இல்லாததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
மழை அளவு அதிகம்! நீர்மட்டம் உயர்வால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை; வெயில் இல்லாததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
மழை அளவு அதிகம்! நீர்மட்டம் உயர்வால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை; வெயில் இல்லாததால் பசுந்தேயிலை மகசூல் குறைவு
ADDED : நவ 01, 2024 12:17 AM

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்ததால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கிடைக்கும் நீர், விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டுமின்றி அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மின் உற்பத்திக்கும் பயனாக அமைந்துள்ளது.
அவ்வப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டு மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு இல்லை
இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பின. குறிப்பாக, குன்னுாரில் ரேலியா அணை உட்பட தடுப்பணைகள்; ஊட்டியில் பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, எமரால்டு அணைகள்; கோத்தகிரியில் ஈளாடா உட்பட அனைத்து நீர்தேக்கங்களும் நிரம்பியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உள்ளது. குன்னுாரில்,7 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வன வளம் பெருக வாய்ப்பு
வறட்சியின் பிடியில் இருந்த வனங்கள் பசுமைக்கு மாறி உள்ளன. மேட்டுப்பாளையம்-குன்னுார் மலைபாதை பகுதிகள் அடர்த்தியாக பசுமைக்கு மாறிய வனங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
எனினும், இந்த பகுதிகளில் சாலை அமைக்கவும், மரங்கள் வெட்டவும் அவ்வப்போது வருவாய் துறையினரும், வனத்துறையினரும் அனுமதி வழங்குவதால் இயற்கை வளங்கள் சிறிது, சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டு மகசூல் குறைவு
வழக்கத்தை விட மழை அதிகம் பெய்தும், போதிய வெயில் இல்லாததால், மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலை தொழில் மேம்படாமல் உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது.
உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜன., முதல் செப்., வரையில் பெய்த மழை அளவை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதே காலத்தில், 20 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. இதன் அளவு, குன்னுாரில், 30 சதவீதம் அதிகமாக இருந்தது. மார்ச் மாதம் அதிகம் பெய்த போதும், மே மாதம் வரை மழை குறைவாக இருந்தது.
ஜூன், ஆக., மாதங்களில் அதிக மழை பெய்தது செப்., குறைந்தது. இதனால், ஒரே மாதத்தில் பசுந்தேயிலை மகசூல், 7 சதவீதம் அதிகரித்தது. பொதுவாக, தேயிலை மகசூலுக்கு மழை மற்றும் வெயில் என இரண்டும் போதிய அளவில் இருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டில் மொத்தமாக கொட்டி தீர்க்கும் மழைக்கு பிறகு போதிய வெயில் இல்லாததால், நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும், 10 சதவீத மகசூல் குறைந்தது,''என்றார்.

