ADDED : ஜன 31, 2025 02:19 AM

கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தில், முதல் முறையாக பெண் ஒருவருக்கு அரசு பஸ்சில் கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலுார்மட்டம் நீர்கண்டி பகுதியை சேர்ந்த சுகன்யா, 34. இவரது கணவர் கருப்பசாமி, கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக கிளையில் பணியாற்றி, இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இந்நிலையில், 'தனக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும்' என, மாநில முதல்வரிடம், சுகன்யா கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கண்டக்டர் பணி வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, கோத்தகிரி - -மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்சில் சுகன்யா, கண்டக்ராக பணியை துவக்கியுள்ளார். இதன் மூலம், நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கண்டக்டர் சுகன்யா கூறுகையில்,'' கணவர் இறந்த நிலையில், குடும்பத்தை பாதுகாக்க உதவ வேண்டும் என, மாநில முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அதன்படி, எனக்கு, நடத்துனர் பணி வழங்கப்பட்டது. இதற்கு, முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது கணவர் பணியாற்றிய அதே அரசு பஸ்சில், பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி. எனது இரு குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்பது தான் என் லட்சியம்,'' என்றார்.