/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தீயால் ஐந்து ஏக்கர் புல்வெளி சேதம்: போராடி கட்டுப்படுத்திய வனத்துறை
/
வனத்தீயால் ஐந்து ஏக்கர் புல்வெளி சேதம்: போராடி கட்டுப்படுத்திய வனத்துறை
வனத்தீயால் ஐந்து ஏக்கர் புல்வெளி சேதம்: போராடி கட்டுப்படுத்திய வனத்துறை
வனத்தீயால் ஐந்து ஏக்கர் புல்வெளி சேதம்: போராடி கட்டுப்படுத்திய வனத்துறை
ADDED : பிப் 18, 2024 02:04 AM

கூடலுார்;கூடலுார் நாடுகாணி அருகே, ஏற்பட்ட வனத்தீயில், 5 ஏக்கர் பரப்பிலான புல்வெளிகள் எரிந்து சாம்பலானது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. முதுமலை வனப்பகுதியில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அருகே உள்ள, கூடலுார் வனப்பகுதியிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வனத்தீ அபாயமும் ஏற்பட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்தீ கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் ஏற்பட்ட வனத் தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை நாடுகாணி பொன்னுார் அருகே, தோட்டக்கலை பண்ணை மற்றும் அதனை ஒட்டி வனப்பகுதியில் திடீர் வனத்தீ ஏற்பட்டது. தேவாலா வனச்சரகர் சஞ்சீவ், வனவர் சுரேஷ் மற்றும் வன ஊழியர்கள், போராடி வைத்தீயை கட்டுப்படுத்தினர். எனினும், வனத்தீயில், 5 ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகள் எரிந்து பாதிக்கப்பட்டது. தீயில், அரிய வகை மூலிகை, ஊர்வன உள்ளிட்ட சிறு வன உயிரினங்களும் பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'தொடரும் வறட்சியில், வனத்தீ அபாயம் உள்ளது. வனத்தீ ஏற்பட்டதால், கடந்த ஆண்டு நடவு செய்யப் பட்ட பல்லாயிரக்கணக்கான மர நாற்றுகள், செடிகளும் பாதிப்பு ஏற்படும். எனவே, வனத்தீயை தடுக்க கூடுதல் கவனம் செலுத்துவதுடன், தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'வனத்தீ ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடர்கிறது.
வனத்தீ, ஏற்படுவதை தடுக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.