/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைக்கு இடம் ஒதுக்க நரிக்குறவர்கள் கோரிக்கை
/
கடைக்கு இடம் ஒதுக்க நரிக்குறவர்கள் கோரிக்கை
ADDED : ஜன 31, 2024 11:42 PM
மேட்டுப்பாளையம் : காரமடை தேர்த்திருவிழாவில், பல ஆண்டுகளாக தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரம் செய்து வந்த இடத்தை, நகராட்சி நிர்வாகம் மீண்டும் வழங்க வேண்டும் என, நரிக்குறவர்கள் காரமடை நகராட்சி அலுவலகம் முன் காத்திருந்தனர்.
காரமடை அருகே, மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட, காந்தி நகரில், 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காரமடை அரங்கநாதர் தேர்த்திருவிழாவின் போது, பஸ் ஸ்டாண்ட் பகுதி மற்றும் நகராட்சி அலுவலகம் முன், தற்காலிக கடைகள் அமைத்து ஊசி, பாசி மணிகள் விற்பது வழக்கம். மாவட்ட நிர்வாகம் இவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூல் செய்யக்கூடாது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு காரமடை அரங்கநாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு பஸ் ஸ்டாண்ட் வளாகம், நகராட்சி அலுவலகம் முன் ராட்டினங்கள், கடைகள் அமைக்க, 54 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், கடைகள் அமைக்க, 36 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.
இன்னும் சில இடங்களுக்கு ஏலம் நடைபெற உள்ளன. இந்நிலையில் நரிக்குறவர்களுக்கு கடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கவில்லை.
இதுகுறித்து நரிக்குறவர்கள் கூறுகையில்,' கடன் பெற்று பொருட்கள் வாங்கி உள்ளதால், வியாபாரம் இல்லாமல் போனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே பழைய இடத்தில் கடைகள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறுகையில், நகராட்சிக்கு போதிய வருவாய் ஏதும் இல்லை. தேர்த்திருவிழாவில் 54 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது.
அதனால் நரிக்குறவர்களுக்கு இடம் வழங்க வாய்ப்பு இல்லை. அதற்கு பதிலாக நகரில் ஏலம் போகாத இடங்களிலும்,மேம்பாலத்தின் அடியிலும், கடைகள் வைத்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.