/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிக பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒரு பக்கம் சாய்ந்து நின்றதால் பரபரப்பு
/
அதிக பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒரு பக்கம் சாய்ந்து நின்றதால் பரபரப்பு
அதிக பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒரு பக்கம் சாய்ந்து நின்றதால் பரபரப்பு
அதிக பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒரு பக்கம் சாய்ந்து நின்றதால் பரபரப்பு
ADDED : நவ 05, 2024 11:14 PM

கூடலுார்; கூடலுாரில் இருந்து அதிக பயணிகளை ஏற்றி, மைசூரு சென்ற அரசு பஸ், பயணிகள் பாரம் தாங்காமல் ஒரு பக்கம் சாய்ந்து தரையில் உரசி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலுாரில் தீபாவளி பண்டிகை முடிந்ததை தொடர்ந்து, வெளியூர்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், கல்லுாரி மாணவர்கள் வெளியூர் செல்வதற்காக, பஸ் ஸ்டாண்டில் குவிந்து வருகின்றனர்.
வெளியூருக்கு கூடுதல் பஸ் இயக்காததால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், கூடலுாரில் இருந்து பல பயணிகள், பஸ்சில் நின்று கொண்டு பயணத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து மைசூரு செல்லும் தமிழக அரசு பஸ், நேற்று முன்தினம், கூடலுார் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிகொண்டு மைசூரு புறப்பட்டது. பஸ்சில் அதிக அளவில் பயணிகள் நின்று கொண்டு பயணித்தனர்.
பஸ், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது துாரம் சென்ற நிலையில், பயணிகளின் பாரம் தாங்காமல் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் சென்றது. ஓட்டுனர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சின் அடிப்பாகம் தரையில் உரசி நின்றது. பஸ்சிலிருந்து பயணிகள் அச்சத்துடன் இறங்கினர். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து, பஸ் சிறிது துாரம் சென்று பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு மைசூரு சென்றது.
பயணிகள் கூறுகையில், 'பண்டிகை முடிந்து வெளியூர் செல்வதற்காக, கூடுதல் பஸ்கள் இல்லாததால், பயணிகள் பஸ்சில் நின்று கொண்டு பயணித்து வருகின்றனர். மைசூரு சென்ற பஸ், அதிக பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்றதால் இச்சம்பவம் நடந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க, வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்குவதுடன், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.