காலநிலை மாற்றத்தின் தாக்கம்: முன்னெச்சரிக்கை அவசியம்
காலநிலை மாற்றத்தின் தாக்கம்: முன்னெச்சரிக்கை அவசியம்
UPDATED : செப் 02, 2026 06:27 PM
ADDED : செப் 02, 2026 06:22 PM
கோத்தகிரி: கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி முதல்வர் சண்முகம் தலைமை வகித்தார்.
கோத்தகிரி வனவர் ரவீந்திரநாத், அறிவியல் சங்க தலைவர் ரமேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
'காலநிலை மாற்றம் காரணமாக, நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்,' என, உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நடப்பாண்டின் காலநிலை மாற்றத்திற்கு 'எல் நினோ' காரணமாக, மாநிலத்தில் பருவமழை குறைந்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் இயல்பான வெப்பநிலை உயர்வதும், அந்த வெப்பம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதும் 'எல் நினோ' பாதிப்பு ஆகும். இதன் விளைவாக, பூமியின் ஒரு பகுதியில் வறட்சி மற்றும் காட்டு தீயும் மற்றொரு பகுதியில் கனமழையையும் காண முடிகிறது.
நடப்பாண்டு நாம் காண்பது, சூப்பர் எல் நினோ. பசிபிக் பெருங்கடலில் இரண்டு முதல், மூன்று டிகிரி வெப்பமடைவதால் இந்த விளைவு ஏற்படுகிறது. இந்த விளைவு, இரண்டு முதல், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதாக, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக, கொசுக்கள் போன்ற உயிரினங்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும். இதனால், மலேரியா, டெங்கு, சார்ஸ், எபோலா, சிக்குன் குனியா மற்றும் கோவில் போன்ற பல தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதன் விளைவாக ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள, சுகாதார துறையும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
