/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் தொடரும் பாதிப்பு! வர்த்தக சுரண்டலை தடுக்க அரசு முன்வருமா?
/
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் தொடரும் பாதிப்பு! வர்த்தக சுரண்டலை தடுக்க அரசு முன்வருமா?
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் தொடரும் பாதிப்பு! வர்த்தக சுரண்டலை தடுக்க அரசு முன்வருமா?
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் தொடரும் பாதிப்பு! வர்த்தக சுரண்டலை தடுக்க அரசு முன்வருமா?
ADDED : ஆக 05, 2025 10:41 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில், பசுந்தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், தேயிலை வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகள் மற்றும் சுரண்டல்களை தடுக்க, இந்திய போட்டி ஆணையத்திடம் (சி.சி.ஐ.,) வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள், பசுந்தேயிலையை, 285 தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர்.
இதை தவிர, சில எஸ்டேட் நிறுவனங்களிலும் தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் குன்னுார், 'டீசர்வ்' கோவை ஏல மையங்களில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு நடந்த முதல் தேயிலை ஏலத்தில், சராசரி விலை கிலோவுக்கு, 128 ரூபாய் கிடைத்தது. தொடர்ந்து, இரக்கம் ஏற்றங்களுடன் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, கடந்த வாரம் நடந்த, 31வது ஏலத்தில் கிலோ, 91.88 ரூபாய் என இருந்தது. அதில், 37 ரூபாய் வரை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.
பசுந்தேயிலை விலை வீழ்ச்சி குன்னுார் தேயிலை மையம் மற்றும் 'இன்கோசர்வ்' மையத்தில், ஏலம் விடப்படும், தேயிலை துாளின் சராசரி விலையின் அடிப்படையில், மாதந்தோறும், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி, சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை துாளின் விலைக்கு ஏற்ப, அந்தந்த மாதத்தில் நடக்கும் ஏலம் அடிப்படையில், பசுந்தேயிலைக்கான விலையை, குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜன., மாதம் பசுந்தேயிலை கிலோ, 20.21 ரூபாய் என இருந்த நிலையில், ஜூலை மாதத்திற்கு, கிலோ, 14.37 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிலோவிற்கு, 5.84 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏற்கனவே விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவு; குடும்ப பொருளாதாரத்தை எதிர் கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறியதாவது:
மத்திய அரசின் பெரு நிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள, இந்திய போட்டி ஆணையம், வர்த்தகத்தில் போட்டியை ஊக்குவிக்கவும், குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாடுகளை தடுக்கும் வகையில், கடந்த, 2002ல் இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ், தேயிலை தொழிலில் நடக்கும் போட்டி வர்த்தகத்தை முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. நீலகிரியின் தேயிலை வர்த்தகம், 4 பெரிய நிறுவனங்களின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மாநில அரசின் 'இன்கோ' நிறுவனமும், இந்த கூட்டணியில் பல ஆண்டுகளாக கை கோர்த்து தொடர்ந்து பயணித்து வருகிறது.
இதனால், தேயிலை வணிகத்தில் உள்ள பாதகமான செயல்களை களைந்து, இந்திய தேயிலை சட்டத்தில் குறிப்பிட்ட படி, ஐகோர்ட் உத்தரவிட்ட குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இதற்காக, சட்டத்தின் அடிப்படையில் இயங்கி வரும், இந்திய போட்டி ஆணையத்திடம் (சி.சி.ஐ.,) முறையாக நகல்களின் அடிப்படையில் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில், இது வரை நடந்துள்ள மோசடிகளும், சுரண்டப்பட்ட விதமும் வெளிச்சத்திற்கு வரும். இதனால் சிறு தேயிலை விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.