/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகள் புதுப்பிக்க அனுமதித்த நகராட்சி; ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
/
கடைகள் புதுப்பிக்க அனுமதித்த நகராட்சி; ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
கடைகள் புதுப்பிக்க அனுமதித்த நகராட்சி; ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
கடைகள் புதுப்பிக்க அனுமதித்த நகராட்சி; ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : செப் 18, 2024 08:46 PM

குன்னுார் : குன்னுாரில் கடைகள் புதுப்பிக்க அனுமதி கொடுத்த நகராட்சி, குண்டம் திருவிழாவிற்கு அம்மன் தேர் கொண்டு செல்லும் வழியையும், ஆக்கிரமிப்பு செய்ய காரணமாக உள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குன்னுாரில் ஆற்றோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே சாலையோர கடைகள் அகற்றப்பட்டன. எனினும், டி.டி.கே, சாலையில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.
மேலும், மார்க்கெட் அருகே வி.பி., தெருவில் ஆற்றோர பகுதியில் உள்ள, 4 கடைகள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகைதாரர்களிடம் இருந்து ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு கைமாறி, நகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடித்து புதிதாக கட்டப்பட்டது.
இது குறித்து அறிந்த, அ.தி.மு.க., கட்சியினரும் கேள்வி எழுப்பாமல் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், மார்க்கெட்டில் இடியும் நிலையில் உள்ள பல கடைகளை புனரமைக்க அனுமதி வழங்காமல், ஆளும்கட்சியினர் ஆதரவுடன், பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்குவதாகவும் சிறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வி.பி., தெருவில் இரு கடைகளை இடித்து, ஒரே கடையாக மாற்றி புதிதாக கட்டப்பட்டு வரும் பணியில், கடையின் முன்புறம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இதன் அருகே உள்ள மற்றொரு கடையும் புதுப்பித்து வருவதுடன், குண்டம் திருவிழாவிற்கு அம்மன் தேர் கொண்டு செல்லும் வழியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் ஒரு சில நடைபாதை கடைகளை அகற்ற கூறும் குன்னுார் போலீசாரும், அதிகாரிகளும், இந்த ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் ஆதரவாகவே செயல்படுகின்றனர். வருவாய் துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
குன்னுர் தாசில்தார் கனிசுந்தரம் கூறுகையில், ''ஆற்றோர ஆக்கிரமிப்புகளில் பஸ் ஸ்டாண்ட் பகுதி கடை நடத்துபவர்கள், மேல் முறையீடுக்கு சென்றதால் அவற்றை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டதால், அகற்றினோம்.
''டி.டி.கே., சாலையோர கடைகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த உத்தரவு வந்தால் அகற்றப்படும். மேலும், அப்பகுதி பொதுமக்கள் சார்பில், ரிட்மனு தாக்கல் செய்தாலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.