/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஊட்டி-200' விழாவுக்காக அமைக்கப்பட்ட பூங்கா புதர் சூழ்ந்து அவல நிலை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
/
'ஊட்டி-200' விழாவுக்காக அமைக்கப்பட்ட பூங்கா புதர் சூழ்ந்து அவல நிலை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
'ஊட்டி-200' விழாவுக்காக அமைக்கப்பட்ட பூங்கா புதர் சூழ்ந்து அவல நிலை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
'ஊட்டி-200' விழாவுக்காக அமைக்கப்பட்ட பூங்கா புதர் சூழ்ந்து அவல நிலை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ADDED : நவ 22, 2024 11:30 PM

ஊட்டி: ஊட்டி அருகே எச்.பி.எப்.,பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தோடர் பழங்குடியினர்; வன விலங்கு சிலைகள் புதர் சூழ்ந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், இயற்கை சூழ்ந்த வனப்பகுதிகளில் குடில் அமைத்து மந்து எனப்படும் கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதியில் தோடர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குலத்தொழில் விவசாயமாகும். இவர்கள் எருமைகளை குல தெய்வமாக வணங்குகின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் நாவல் மரங்களை வளர்த்து இயற்கையான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள முத்தநாடுமந்து பகுதியில் தோடர் மக்களின் குல தெய்வ கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழாவில், மாவட்டம் முழுவதும் வசித்து வரும் தோடர் மக்கள் பங்கேற்கின்றனர்.
புதர் சூழ்ந்த அவலம்
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, 'ஊட்டி- 200' ஆண்டின் நிகழ்ச்சியின் போது, பல்வேறு பணிகள்; நிகழ்ச்சிகளை நடத்த, அரசின் சார்பில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதில், ஒரு பகுதியாக நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடியினரின் பாரம்பரியத்தை பறைசாற்றவும், நீலகிரியில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊட்டி எச்.பி.எப்., பகுதியில், சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. அதில், தோடர் பழங்குடியினரின் குடில், மக்களின் உருவ சிலைகள் மற்றும் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்டவைகளின் தத்ரூபமான சிலைகளும் காட்சிபடுத்தப்பட்டன. இந்த பகுதி, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சுற்றுலா பயணிகள் அதிருப்தி
கேரளா, கர்நாடகாவில் இருந்து, வரும் சுற்றுலா பயணிகள், எச்.பி.எப்., பகுதியில் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி, பூங்கா பகுதியில் நின்று போட்டோ, செல்பி எடுத்து சென்றனர்.
இந்நிலையில், பூங்காவை பராமரிக்காமல் விட்டதால், தற்போது புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இவ்வழியாக வரும் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'ஊட்டி-200 விழாவின் போது ஒதுக்கப்பட்ட நிதியில், நகரில் சில பகுதிகளில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது.
ஆனால், இப்பகுதிகளில் முறையான பராமரிப்பு இல்லாததால், மக்களின் வரி பணம் வீணாகி வருகிறது.
நாள்தோறும் இந்த சாலையின் வழியாக, மாவட்ட உயர் அதிகாரிகள் சென்றும், இந்த பகுதியை கண்டு கொள்ளவில்லை. எனவே, அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.