/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புஞ்சை கொல்லி பழங்குடியின கிராம மக்களுக்கு மாற்றிடம் தேவை! அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மண்ணின் மைந்தர்கள்
/
புஞ்சை கொல்லி பழங்குடியின கிராம மக்களுக்கு மாற்றிடம் தேவை! அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மண்ணின் மைந்தர்கள்
புஞ்சை கொல்லி பழங்குடியின கிராம மக்களுக்கு மாற்றிடம் தேவை! அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மண்ணின் மைந்தர்கள்
புஞ்சை கொல்லி பழங்குடியின கிராம மக்களுக்கு மாற்றிடம் தேவை! அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மண்ணின் மைந்தர்கள்
ADDED : நவ 25, 2024 10:30 PM

பந்தலுார்; 'பந்தலுார் அருகே புஞ்சைகொல்லி பழங்குடியின கிராமத்து மக்கள், தங்களுக்கு மாற்றிடம் ஒதுக்கி அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், குறும்பர், காட்டுநாயக்கர், பணியர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்த பழங்குடியின மக்களின், வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும், அவை பேச்சளவிலேயே உள்ளது.
இதனால், பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், பழங்காலங்களை நினைவுறுத்தும் வகையில், மண்ணின் மைந்தர்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்
அடிப்படை வசதிகள் இல்லை
இவர்களின் கிராமங்களை ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள், வெறும் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதுடன் தங்கள் பணியை நிறுத்தி கொள்கின்றனர். தொடர்ந்து பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில், ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில், பல கிராமங்களில் பழங்குடியினர் சாலை மற்றும் குடியிருப்பு வசதிகள் இல்லாமல், சிரமப்பட்டு வருகின்றனர்.
அதில், சேரங்கோடு ஊராட்சி, 9-வது வார்டுக்கு உட்பட்ட, புஞ்சைக்கொல்லி கிராமத்தில், காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் எட்டு வீடுகளில், 10 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் நடைபாதை, தனியார் நிலத்தில் உள்ளதால் நடைபாதையை சாலையாக மாற்ற இயலாத நிலை உள்ளது. மேலும் குடியிருப்புகள் கட்டி, 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், மிகவும் சேதமடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
குடிசை வீடுகளில் வாழ்க்கை
இதனால், அரசின் தொகுப்பு வீடுகள் முன்பாக, தற்காலிக குடிசைகளை அமைத்து அதில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். வனப்பகுதிகளில் சேகரிக்கும் கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் மற்றும் தேன் ஆகியவற்றை சேகரித்து தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தற்போது, யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் வரவால், வனப்பகுதிகளுக்கும் செல்ல முடியாமல், வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
காட்டுநாயக்கர் சமுதாய தலைவர் சந்திரன் கூறுகையில், ''எங்கள் கிராமத்துக்கு இதுவரை நடைபாதை மற்றும் சாலை வசதி இல்லாத நிலையில், குடியிருப்புகளும் கட்ட முடியாத நிலை உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு இதனை ஒட்டிய வருவாய் அல்லது வனத்துறை நிலத்தில், இடம் ஒதுக்கி கொடுத்து அரசின் தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம்; வனத்துறையிடம் பல மனுக்களை அளித்து வருகிறோம். ஆனால், அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது,'' என்றார்.
எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இப்பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, அவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.