ADDED : மார் 17, 2024 11:37 PM
அன்னுார்:தமிழகத்தில் 11 இடங்களில் திருடியவர் அன்னுாரில் பிடிபட்டார்.
அன்னுாரில், கோவை சாலையில், உள்ள காஜா மொபைல் கடையில் கடந்த 14ம் தேதி விலை உயர்ந்த ஏழு மொபைல்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் கொள்ளை போனது. இது குறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸ் எஸ்.ஐ., கவுதம், தலைமை காவலர் கருணாகரன், காவலர் குருசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசாரின் ஒத்துழைப்போடு மொபைல் ஷாப்பில் திருடியவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், குச்சனுாரைச் சேர்ந்த மணிகண்டன், 35. தற்போது இடிகரையில் தங்கி கட்டிட வேலை செய்தபடி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் இவர் மீது தேனி, திருப்பூர், துடியலூர், அவிநாசி, ஊத்துக்குளி, ஈரோடு, தென்காசி உட்பட 11 இடங்களில் திருட்டு வழக்கு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனிடமிருந்து மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

