/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்ப்பிணிகளுக்கு அரசின் சத்து மாவு வழங்குவதில் தொடரும் சிக்கல்! பழங்குடியினர் கிராமங்களில் அதிகபட்ச பாதிப்பு
/
கர்ப்பிணிகளுக்கு அரசின் சத்து மாவு வழங்குவதில் தொடரும் சிக்கல்! பழங்குடியினர் கிராமங்களில் அதிகபட்ச பாதிப்பு
கர்ப்பிணிகளுக்கு அரசின் சத்து மாவு வழங்குவதில் தொடரும் சிக்கல்! பழங்குடியினர் கிராமங்களில் அதிகபட்ச பாதிப்பு
கர்ப்பிணிகளுக்கு அரசின் சத்து மாவு வழங்குவதில் தொடரும் சிக்கல்! பழங்குடியினர் கிராமங்களில் அதிகபட்ச பாதிப்பு
ADDED : ஏப் 09, 2025 09:59 PM

பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள்; பழங்குடியினர் வாழும் பகுதிகளில் சத்துமாவு பாக்கெட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில், மாநில அரசு சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, இணை உணவான சத்து மாவு பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது.
மேலும், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, 'பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வில், மாநிலத்தில், 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த, 2022 ஆம் ஆண்டு மே மாதம் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தை நீலகிரியில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், தங்களிடம் பதிவு செய்துள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
வினியோகம் செய்வதில் சிக்கல்
அதில், தற்போது, கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு தாயார் வீட்டுக்கு சென்ற பின்னரும், பிரசவம் முடிந்து திரும்பி வரும் வரையிலும் சத்துமாவு வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், தற்போது சத்துமாவு வழங்குவதற்கு,'போசான் டிரேக்கர்' எனும் செயலியின் கீழ், சம்பந்தப்பட்ட பயனாளியின் முகத்தை புகைப்படம் எடுத்து, ஆதார் எண்ணை பதிவு செய்து, பயனாளியின் மொபைல் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி., பதிவு செய்தால் மட்டுமே சத்து மாவு வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான கிராமப்புற பயனாளிகள், ஆதார் எடுக்கும் போது வழங்கப்பட்ட மொபைல் எண்கள் தற்போது மாறிவிட்டது. வேறு பல பழங்குடி பெண்கள், குடும்ப தலைவரின் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளதாலும் ஓ.டி.பி., வராமல் சத்து மாவு வழங்க முடியாத சூழ்நிலை தொடர்கிறது. இதனால், பழங்குடியின கர்ப்பிணி தாய்மார்கள்; குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'இந்த திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, கிராமப்புற பயனாளிகள் பலருக்கு சத்துமாவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண்பதில் அக்கறை கொள்ளாத சமூக நலத்துறையினர்; குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் சத்துமாவு வழங்குவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, மாவட்டத்தில் அதிகமாக உள்ள பழங்குடியின பெண்களிடம் மொபைல் எண்கள் இல்லாத நிலையில், எப்படி இந்த திட்டத்தை நிறைவேற்றுவது என்பது தெரியவில்லை. இதை புரிந்து கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலி பதிவில் உள்ள சிக்கல் தீரும் வரை அவர்களுக்கு சத்துமாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
சுகாதாரத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் தற்போது, 6,500 கர்ப்பிணிகள் உள்ளனர். தொழிற்நுட்ப பிரச்னை தொடர்பாக இவர்களில் பலருக்கு சத்துமாவு வழங்குவதில் உள்ள இடர்பாடு குறித்து, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.