/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியின் அழகிய கிராமத்தில் மின்சார பிரச்னை: 20 நாட்களாக அவதிப்படும் தெங்குமரஹாடா கிராம மக்கள்
/
நீலகிரியின் அழகிய கிராமத்தில் மின்சார பிரச்னை: 20 நாட்களாக அவதிப்படும் தெங்குமரஹாடா கிராம மக்கள்
நீலகிரியின் அழகிய கிராமத்தில் மின்சார பிரச்னை: 20 நாட்களாக அவதிப்படும் தெங்குமரஹாடா கிராம மக்கள்
நீலகிரியின் அழகிய கிராமத்தில் மின்சார பிரச்னை: 20 நாட்களாக அவதிப்படும் தெங்குமரஹாடா கிராம மக்கள்
ADDED : நவ 09, 2025 10:09 PM

கோத்தகிரி: கோத்தகிரி தெங்குமரஹாடா கிராமத்தில், 20 நாட்களாக அடிக்கடி தொடரும் மின்தடையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரிக்கு உட்பட்ட தெங்குமரஹடா கல்லம்பாளையம், அல்லிமாயார், புதுகாடு,சித்திப்பட்டி ஆகிய குக்கிராமங்களில், 800 வீடுகளில், 2,500 பேர் வசிக்கின்றனர்.
சாலை வசதி இல்லாத இக்கிராமத்திற்கு, பரிசலில் மாயாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். கோடநாடு காட்சி முனையில் இருந்து பார்க்கும் போது, ஓவியம் போல காட்சி அளிக்கும் இந்த கிராமம், மலை மாவட்டத்தில் அழகிய கிராமமாக கருதப்படுகிறது.
தெங்குமரஹாடா கிராமத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள 'கெஜலட்டி' துணை மின் நிலையத்திலிருந்து இதுவரை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இங்குள்ள 'டிரான்ஸ்பார்மர்' பழுதடைந்த நிலையில், தற்போது, ஈரோடு மாவட்டம் பவானி சாகர் வெள்ளியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
இந்த மின் நிலையம், 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில், மின் கம்பம் மற்றும் மின் ஒயர்கள் பழுதாகி உள்ளன. மின் இணைப்பு முழுக்க வனப்பகுதிகள் வருவதால், யானைகள் அங்கும் இங்கும் செல்வதாலும், மரங்கள் விழுவதாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கடந்த, 20 நாட்களாக, அடிக்கடி ஏற்படும் மின் தடையால், ரேஷன் கடைகளில், ரேகை பதிவு செய்ய முடியாமல் பொருட்கள் வாங்க சிக்கல் உள்ளது.
கிராமத்திற்கு, மாயார் ஆற்றில் இருந்து பம்ப் செட் மூலமாக தண்ணீர் வினியோகிக்கவும் முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில், விலங்குகளின் அச்சமும் அதிகரித்துள்ளது. மக்கள் கூறுகையில், 'இங்கு, 20 நாட்களாக மின்சார பிரச்னை தொடர்வதால், மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்.
கடந்த காலங்களில் வினியோகித்தது போல, கெஜலட்டி துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கி, புதிய ஒயர் இணைத்து இங்கிருந்து மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்திற்கு சீரான மின்வினியோகம் கிடைக்க, சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
பவானிசாகர் மின் வட்ட அதிகாரி நவீன் கூறுகையில்,'' இப்பகுதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரில் இருந்த பழுது நீக்கப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இனி மின்தடை இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

