/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநில நெடுஞ்சாலை துறை மெத்தனம்!
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநில நெடுஞ்சாலை துறை மெத்தனம்!
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநில நெடுஞ்சாலை துறை மெத்தனம்!
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநில நெடுஞ்சாலை துறை மெத்தனம்!
ADDED : ஜன 12, 2025 10:55 PM

குன்னுார்: குன்னுாரில் நெரிசல் மிகுந்த, 'மவுன்ட் ரோடு' பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநில நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
குன்னுார் 'மவுன்ட் ரோடு' பகுதி, மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோத்தகிரி மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து பெட்போர்டு வரையிலான இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இந்த பகுதியில், மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வங்கிகள், பள்ளிகள் உள்ளதால், மக்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
சாலையில் நடக்கும் மக்கள்
மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கடைகளை சேர்ந்தவர்கள் முன்புறம் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் மக்கள் சாலையில் நடந்து செல்லும் அவலம் தொடர்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அவ்வப்போது, விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடைகளுக்கு வெளியே, மக்கள் நடந்து செல்லும் இடத்தில் மழை, வெயில் பாதிப்புகளை தவிர்க்க, கூரைகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
கண்துடைப்பிற்காக அளவீடு
இது குறித்து புகார்கள் பலமுறை தெரிவித்தும், மாநில நெடுஞ்சாலை துறையினர் தீர்வு காணாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். கலெக்டர், நகராட்சியில் புகார் மனு கொடுக்கும் போது மட்டும், கண் துடைப்பிற்காக அளவீடு நடத்தும் மாநில நெடுஞ்சாலைதுறையினர், பல அரசியல் கட்சியினரின் கடைகள் அப்பகுதியில் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், கடந்த வாரத்தில் நகராட்சி சார்பில், மார்க்கெட் அருகே மவுன்ட் ரோட்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. எனினும், மீண்டும் சிறிது, சிறிதாக ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றன.
அடிபணிந்த அதிகாரிகள்
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், '' கலெக்டரின் தலைமையில் நடக்கும் காலாண்டு நுகர்வோர் கூட்டத்தில், மவுன்ட் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி, புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த கூட்டத்திலும் தெரிவித்த போது, அப்பகுதியை 'சர்வே' எடுத்து அகற்றுவதாக மாநில நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
'எத்தனை முறை சர்வே எடுப்பீர்கள்,' என, கலெக்டர் கேள்வியும் எழுப்பினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, 2 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து சென்றதால், அப்பணி கிடப்பில் போடப்பட்டது. எனவே, மாநில நெடுஞ்சாலை துறை;நகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அப்பகுதியில் நடைபாதை அமைக்க முன்வர வேண்டும்,'' என்றார்.