/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நேரு பூங்காவை சீசனுக்கு தயார்படுத்தும் பணி
/
நேரு பூங்காவை சீசனுக்கு தயார்படுத்தும் பணி
ADDED : பிப் 19, 2025 09:58 PM

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவை கோடை சீசனுக்கு தயார்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி நகரின் மைய பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. கோத்தகிரி பேரூராட்சி நிர்வகித்து வரும் இப்பூங்காவில், ஆண்டுதோறும் கோடை விழாவின் முதல் நிகழ்வாக, தோட்டக்கலை துறை சார்பில், காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கண்காட்சிக்காக, பூங்காவை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த, 14ம் தேதி மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கி, படிப்படியாக நடந்து வருகிறது.
அதற்காக, 'டேலியா, பேன்சி, இன்காமேரி கோல்ட், டயாந்தஸ், பிட்டோனியா, பிளாக்ஸ், ஸ்வீட் வில்லியம், அஜெரியா, இனியா, ஸ்டாக், பிக்கோனியா, கேலண்டலா மற்றும் சூரியகாந்தி,' உட்பட்ட, பல்வேறு வகைகளில், 10 ஆயிரம் வண்ண மலர் நாற்றுகள் பூங்காவில் நடவு செய்யப்பட உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி மலர் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு, கோடை விழா நாட்களில் பூத்து குலுங்கும் வகையில், பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூங்கா ஊழியர்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கணிசமாக பூங்காவுக்கு வருகின்றனர். மலர் நாற்றுகள் மற்றும் புல்தரை பாதிக்காமல் இருக்க, தற்போது, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு 'போர்டு' வைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு, பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய ஏதுவாக, பூங்காவை சிறப்பாக பராமரித்து பொலிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.