/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சி மார்க்கெட் கடைகள் திடீர் அடைப்பு; தொடர் போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவிப்பு
/
நகராட்சி மார்க்கெட் கடைகள் திடீர் அடைப்பு; தொடர் போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவிப்பு
நகராட்சி மார்க்கெட் கடைகள் திடீர் அடைப்பு; தொடர் போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவிப்பு
நகராட்சி மார்க்கெட் கடைகள் திடீர் அடைப்பு; தொடர் போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவிப்பு
ADDED : பிப் 16, 2024 02:10 AM

ஊட்டி;ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டில், இரண்டாவது கட்டமாக கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் திடீர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில், 1500 நிரந்தர கடைகளும்; 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்க்கு தினமும், 3,500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
பழைமையான இந்த மார்க்கெட்டில், புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. புதிய கடைகளை கட்ட, 36 கோடி ரூபாய் ஒதுக்கியது. 1500- கடைகள் இருப்பதால், 3 கட்டங்களாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடைகள் காலி செய்யப்பட்டு இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், முதற்கட்ட பணிகளை நிறைவு செய்யாமல், இரண்டாம் கட்டமாக மார்க்கெட் கடைகளை இடித்து, ஒரு சில நாட்களில் பூமி பூஜை போட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
தொடர்ந்து, மாற்று ஏற்பாடு செய்யாமல் இரண்டாம் கட்டமாக கடைகளை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்கெட் வியாபாரிகள் நேற்று மாலை, 6:30 மணி முதல் கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாமுகமது; செயலாளர் குலசேகர் ஆகியோர் கூறுகையில்,''புதிய கடைகளை கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வியாபாரிகள் பாதிக்காமல் இருக்க, இடிக்கப்படும் கடைகளுக்கு பதிலாக தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தபின், கடைகளை இடிக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தொடர் போராட்டம் நடத்துவோம்,'' என்றனர்.
நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''புதிய கடைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு விட்டதால் தாமதப்படுத்தாமல் பணிகளை முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால் நிதி திரும்ப சென்று விடும். இரண்டாம் கட்டமாக இடிக்கப்படும் கடைகளுக்கு பதிலாக, 'என்.சி.எம்.எஸ்' அல்லது வேறு இடத்தில் மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
அங்கு கடைகளை கட்டி வியாபாரிகளுக்கு வழங்கப்படும். அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.