/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குந்தா அணை முழுமையாக தூர்வாரும் பணி... பல ஆண்டுகள் தாமதம்!நீர் மின் உற்பத்தி, பாசன விவசாயத்திற்கு சிக்கல்
/
குந்தா அணை முழுமையாக தூர்வாரும் பணி... பல ஆண்டுகள் தாமதம்!நீர் மின் உற்பத்தி, பாசன விவசாயத்திற்கு சிக்கல்
குந்தா அணை முழுமையாக தூர்வாரும் பணி... பல ஆண்டுகள் தாமதம்!நீர் மின் உற்பத்தி, பாசன விவசாயத்திற்கு சிக்கல்
குந்தா அணை முழுமையாக தூர்வாரும் பணி... பல ஆண்டுகள் தாமதம்!நீர் மின் உற்பத்தி, பாசன விவசாயத்திற்கு சிக்கல்
ADDED : ஜன 28, 2024 11:34 PM

ஊட்டி:நீலகிரியில், மின் உற்பத்தி மற்றும் வெளியேறும் உபரிநீரால் பாசன விவசாயம் ஆகியவற்றுக்கு முக்கிய அணையாக கருதப்படும், குந்தா அணையை துார்வாருவதில் பல ஆண்டுகள் தாமதத்தால சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் குந்தா அணை, 89 அடி கொண்டதாகும். குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, 175; பரளி, 180; பில்லுார், 100 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
அணை நீர்பிடிப்பு பகுதிகளை சுற்றி தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் இருப்பதால் பருவமழையில் அடித்து வரப்படும் சேறும், சகதியும் அணையில் சேகரமானதால், 60 சதவீதம் அளவுக்கு சகதி நிறைந்துள்ளது.
அணையில் பல ஆண்டுகளாக முழுமையாக துார்வார மின்வாரியம் முன்வராததால், சகதி கலந்த தண்ணீர் ராட்சத குழாய் மூலம் சென்று மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால், மின்சாதன கருவிகள் அடிக்கடி பழுதாகி மின் உற்பத்தி தடைப்பட்டு வருகிறது.
இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சீராக மின்சாரம் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அணை சுற்றுப்புற பகுதிகள் முட்புதரால் ஆக்கிரமிக்கப்பட்டு, சகதி அதிகரித்ததால், கெத்தை, பரளி மின்நிலையங்களில் அடிக்கடி மின்உற்பத்தி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
பாசனத்திற்கும் சிக்கல்
குந்தா மின் வட்டமான அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை மற்றும் பில்லுார் அணைகளில் ஆண்டு பருவமழையின் போது, அணைகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர், மேட்டுப்பாளையம் நீரோடை வழியாக பவானி அணைக்கு செல்கிறது.
இந்த உபரிநீர் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கும் பயன்பட்டு வந்தது. அணைகளை முழுமையாக துார்வாராத காரணத்தினால தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் பாசன விவசாயத்திலும் சிக்கல் உருவாகியுள்ளது.
அரசு கவனிக்குமா?
காமராஜர் ஆட்சி காலத்தில், 1952ம் ஆண்டில் குந்தா அணை கட்டப்பட்டது. 72 ஆண்டை கடந்துவிட்டது. மின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கும் குந்தா அணையை முழுமையாக தூர்வாரி பராமரிப்பு பணிக்காக, உலக வங்கி, கடந்த, 8 ஆண்டுக்கு முன்பு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
டெண்டர் விடுவதில் எழுந்த அரசியல் தலையீட்டால், நிதி திரும்ப சென்றது. நீர்மின் உற்பத்தியில் மாநில அளவில், நீலகிரியில் தான், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் கொண்ட மின்நிலையங்கள் உள்ளது.
நீர் மின் உற்பத்தியில் ஒரு 'யூனிட்' மின்சாரம் தயாரிக்க, 50 பைசா தான் செலவாகிறது. எனினும், நீலகிரியில் உள்ள அணை, மின் நிலையங்களை அரசு மேம்படுத்தாமல் உள்ளது அதிருப்தி அளிப்பதாக உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'அணையில் அதிகரித்துள்ள சகதியால் மின்கருவிகள் அடிக்கடி பழுதாகிறது. மின் உற்பத்தியிலும் சிக்கல் ஏற்படுகிறது. மின் உற்பத்தியை நிறுத்திய பின் தான் சகதியை அகற்ற முடியும் என்பதால், குந்தா அணையை முழுமையாக துார்வாருவது குறித்து சென்னை தலைமை மேலதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.' என்றனர்.