ADDED : அக் 03, 2024 12:04 AM

குன்னுார்: குன்னுார் ஆறுகளில் சூழ்ந்துள்ள முட்புதர்கள், மண் மற்றும் குப்பை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.
குன்னுார் சுற்றுப்புற மலைப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் நீர், பல இடங்களில் நீரோடைகள், சிற்றாறுகள் என கடந்து பவானி ஆற்றில் கலக்கிறது. கடந்த, 1847ம் ஆண்டில் 'ஹன்கூன்' ஆறு என அழைக்கப்பட்ட, டி.டி.கே., சாலை அருகே உள்ள ஆற்றில், ஆக்கிரமிப்புகளால் வெள்ளம் செல்வதில் பாதிப்புகள் ஏற்படுகிறது.
மலை பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், ஆற்றில் சென்று சேர ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கால்வாய்கள் ஆக்கிரமித்தும் மறைக்கப்பட்டும் உள்ளது. ஆறு, சிற்றாறாக மாறியது.
தற்போது இங்குள்ள நீரோடை மற்றும் சிற்றாறுகளில் பலரும் குப்பைகள் கொட்டுவதுடன் கழிவு நீரும் கலந்து விடுகின்றனர்.
முட்புதர் அதிகம்
இதில், பஸ் ஸ்டாண்ட் வி.பி., தெரு கிருஷ்ணாபுரம், டி.டி.கே., சாலை போன்ற பகுதிகளில் இந்த சிற்றாறுகளில் முட்புதர்கள், குப்பை கழிவுகள் அடைத்து மிகவும் மோசமான நிலையில் மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த, 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மற்றும் செப்., மாதங்களில் இரு கட்டமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் 'கிளீன் குன்னுார்' அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் துார்வாரும் பணிகளை மேற்கொண்டதால், மழை காலத்தில் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், சில ஆண்டுகளில் மீண்டும் முட்புதர்கள், குப்பைகள் மண் சூழ்ந்தது.
இந்நிலையில், 'இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியுடன், கிளீன் குன்னூர் அமைப்பு, பொக்லைன் பயன்படுத்தி புதர்கள், குப்பைகள் அகற்றி, கரையோரத்தை திடப்படுத்தும் பணிகளை துவக்கி உள்ளது. இதனை, பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கோவை மண்டல அலுவலக முதன்மை மண்டல மேலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி, முதன்மை விற்பனை மேலாளர்- தீபக், விற்பனை அதிகாரி ஈஸ்வர ஐயர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நகராட்சி தலைவி சுசிலா, கமிஷனர் சசிகலா முன்னிலை வகித்தனர். கிளீன் குன்னூர் அமைப்பு செயலாளர் வசந்தன் தலைமையில் தன்னார்வலர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.