/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலைவாழ் பழங்குடியினருக்கு நில பட்டா வழங்கியதில் பெரும் குழப்பம்! நீதி கேட்டு கலெக்டரிடம் வந்த மண்ணின் மைந்தர்கள்
/
மலைவாழ் பழங்குடியினருக்கு நில பட்டா வழங்கியதில் பெரும் குழப்பம்! நீதி கேட்டு கலெக்டரிடம் வந்த மண்ணின் மைந்தர்கள்
மலைவாழ் பழங்குடியினருக்கு நில பட்டா வழங்கியதில் பெரும் குழப்பம்! நீதி கேட்டு கலெக்டரிடம் வந்த மண்ணின் மைந்தர்கள்
மலைவாழ் பழங்குடியினருக்கு நில பட்டா வழங்கியதில் பெரும் குழப்பம்! நீதி கேட்டு கலெக்டரிடம் வந்த மண்ணின் மைந்தர்கள்
ADDED : செப் 01, 2025 07:38 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே கடலை கொல்லி கிராமத்தில், முன்னாள் பிரதமர் வழங்கிய பட்டா நிலத்திற்கு, மாநில அரசு மீண்டும் பட்டா வழங்கியதால், பாதிக்கப்பட்டுள்ள மண்ணின் மைந்தர்கள் நீதி கேட்டு கலெக்டரிடம் வந்தனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 20 அம்ச திட்டத்தின் கீழ், கடந்த, 1976ம் ஆண்டு, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 10 பேருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் கடலைக்கொல்லி கிராமத்தில் நிலம் வழங்கப்பட்டது.
அதே ஆண்டு நவ.,19ம் தேதி அப்போதைய மாவட்ட கலெக்டர் இன்பசாகரன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். பட்டாக்களை பெற்ற பயனாளிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போது, குறிப்பிட்ட நிலம் தனியார் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், பயனாளிகளுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு இது குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வருக்கு மனு அனுப்பியும் தீர்வு கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், அந்த நிலத்தில் பழங்குடியினர் மற்றும் பிற சமுதாயத்தினர் தேயிலை விவசாயம் செய்தும், வீடு கட்டியும் குடியேறினர்.
இந்நிலையில், 'பட்டா பெற்றவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும்,' என, கூடலுார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, கடந்த மாதம், 20ம் தேதி நில அளவை செய்யப்பட்டு, பயனாளிகளில், 5 பேருக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
கலெக்டரிடம் வந்த பழங்குடியினர் இந்நிலையில், 'கடந்த, 1981 ஆம் ஆண்டு அதே பகுதியில் தங்களுக்கு, அரசின் நில பட்டா வழங்கப்பட்டதன் பேரில், அங்கு குடியிருப்புகள் கட்டியும், விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, தங்களை வெளியேற கூறினால் எங்கு செல்வோம். எங்களிடம் அரசின் பட்டா உள்ளது,' எனக் கூறி, அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
நாங்கள் எங்கு செல்வோம் பழங்குயின மக்கள் கூறுகையில், 'தங்களுக்கு பட்டா வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை பூட்டி தங்களை வெளியேற்றுவதால் குடியிருக்க இடமில்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளோம். 1976 ஆம் ஆண்டு மத்திய அரசு மூலம் வழங்கப்பட்ட பட்டா நிலத்திற்கு, மீண்டும் மாநில அரசு, 1981 ஆம் ஆண்டு பட்டா வழங்கியதில் எங்கள் குற்றம் ஏதும் இல்லை.
அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் வழங்கப்பட்ட பட்டாவில் ஏற்பட்ட குழப்பம் குறித்து, மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து, மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு வாழும் நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றினால், நாங்கள் எங்கு செல்வோம்,' என்றார்.
கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், ''இந்த பிரச்னை குறித்து பழங்குடி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. தகவல் வந்தால், உரிய ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.