தானியங்கி கேமராவில் புலி கணக்கெடுப்பு ; முதுமலையில் வன ஊழியர்களுக்கு பயிற்சி
தானியங்கி கேமராவில் புலி கணக்கெடுப்பு ; முதுமலையில் வன ஊழியர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 29, 2024 08:43 PM

கூடலுார் : கூடலுாரில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு குறித்து, வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் ஆண்டுதோறும் புலி மற்றும் சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. பிற வனக்கோட்டங்களில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கணக்கெடுப்பு நடந்து வந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள வனக்கோட்டங்களிலும், ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கூடலுார் வனக்கோட்டத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள், சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர். இதற்கான பயிற்சி முகாம், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவரவியல் மையத்தில் நடந்தது.
முகாமுக்கு, பயிற்சி உதவி வன பாதுகாவலர் அருண்மொழிவர்மன் தலைமை வகித்தார். வன உயிரியியலாளர்கள் சந்தோஷ், விமல், கார்த்திகா ஆகியோர் தானியங்கி கேமராக்கள் மூலம் புலி மற்றும் சிறுத்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், தானியங்கி கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, புலிகள் கணக்கெடுப்புக்காக வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் முறை குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
முகாமில், வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், சஞ்சில், ரவி, அய்யனார் மற்றும் கூடலூர் வன கோட்டை வன ஊழியர்கள் பங்கேற்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் வனக்கோட்டத்தில், புலிகள் கணக்கெடுப்புக்காக, 105 இடங்களில் தானியங்கள் கேமராக்கள், பொருத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. அனைத்து கேமராக்களும் பொருத்தும் பணி முடிவு பெற்ற நாளிலிருந்து, 30 நாட்களுக்கு இப்பணி நடைபெறும்,' என்றனர்.
