/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஐந்து மாதத்தில்... புலிகள் உயிரிழப்பு அதிகரிப்பு! சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்துமா வனத்துறை?
/
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஐந்து மாதத்தில்... புலிகள் உயிரிழப்பு அதிகரிப்பு! சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்துமா வனத்துறை?
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஐந்து மாதத்தில்... புலிகள் உயிரிழப்பு அதிகரிப்பு! சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்துமா வனத்துறை?
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஐந்து மாதத்தில்... புலிகள் உயிரிழப்பு அதிகரிப்பு! சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்துமா வனத்துறை?
ADDED : ஜூன் 01, 2025 11:04 PM

கூடலுார்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த, ஐந்து மாதங்களில், பல்வேறு காரணங்களால், ஐந்து புலிகள் இறந்தது குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், மசினகுடி, கூடலுார் மற்றும் நீலகிரி வனக்கோட்டம் ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக அமைந்துள்ளன.
இப்பகுதிகள் புலிகள் வாழ்வதற்கான சூழலை கொண்டுள்ளதால், மாவட்ட அளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் புலிகளின் இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதாக, வன உயிரின ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இறப்பு விகிதம் அதிகரிப்பு
கடந்த 2023ல் ஆக., செப்., மாதத்தில், ஆறு புலிக்குட்டிகள் உட்பட, 10 புலிகள் பல்வேறு பகுதிகளிலும் இறந்தன. இந்த குட்டிகளின் தாய் புலிகளின் நிலைகுறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. இவற்றை கண்டறிய பல்வேறு பகுதிகளிலும் கேமராக்களை வைத்தும் புலிகள் தென்படவில்லை.
தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் விசாரணை மேற்கொண்டன. விசாரணையில், 'ஆறு குட்டிகள் இயற்கையாக உயிரிழந்துள்ளன. புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக இரண்டு புலிகள் இருந்துள்ளன. இரண்டு புலிகள் விஷம் வைத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,' என, தெரிவித்துள்ளனர். ஆனால், 'இறந்த புலிக்குட்டிகளின் தாய்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை,' என, கூறப்படுகிறது. 'தாய்புலிகள் கொல்லப்பட்டு கடத்தப்பட்டதால், குட்டிகள் இறந்திருக்கலாம்,' என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சுருக்கு, விஷத்தில் புலிகள் பலி
இந்நிலையில், கடந்த ஆண்டு கூடலுார் வனக்கோட்டம், பிதர்காடு பகுதியில், விஷம் வைத்த பன்றியின் இறைச்சி உண்டு குட்டியுடன் புலி உயிரிழந்தது.
செலுக்காடி அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி, 4 வயது ஆண் புலி உயிரிழந்தது. சம்பவத்தில் தொடர்புடைய, 6 பேரை வனத்துறையினர், உடனடியாக கைது செய்தனர்.
நடப்பாண்டு, முதுமலை நெலாக்கோட்டை வனச்சரகம் விலங்கூர் அருகே, மற்றொரு புலி தாக்கியதில் பிறந்து, 7 மாதமான புலிக்குட்டி ஜன., 20ல் உயிரிழந்தது.
இதே வனச்சரகத்தில் பென்னை காப்பு காடு பகுதியில் மார்ச், 3ல் ஐந்து வயது பெண் புலியும், மார்ச், 6ல், 10 வயது ஆண் புலியும் உயிரிழந்து கிடந்தன.
சில நாட்களில் இரு புலிகள் பலி
நீலகிரி வனக்கோட்டம், நடுவட்டம் பகுதியில், எட்டு வயது ஆண் புலி இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தது.
தொடர்ந்து, முதுமலை மசினகுடி சீகூர் வனப்பகுதியில் நேற்று ஒரு வயது ஆண் புலி இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புலிகள் குறைந்த வயதில் இயற்கையாகவும், இயற்கைக்கு மாறாகவும் இறந்து வருவது அதிகரித்து வருவதால், இப்பகுதிகளில் புலிகள் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகி உள்ளது.
ஒவ்வொரு முறையும் புலிகள் இறப்பின் போது, பிரேத பரிசோதனை செய்யும் வனத்துறையினர், 'அறிக்கை வந்தவுடன் இறப்புக்கான காரணம் கூறப்படும்,' தெரிவிப்பதுடன் சரி, இறப்புக்கான முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி வருகிறது.