ADDED : மார் 15, 2024 11:15 PM

கூடலுார்:கூடலுார் பாண்டியார் டான்டீ குடியிருப்புக்கு செல்லும் சாலையை, புலி கடந்து சென்றதாக தொழிலாளர்கள் தெரிவித்த நிலையில், வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை (டான்டீ) கோட்டம் சரகம் எண்-1, தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு, கோழிக்கோடு சாலை பால்மேடு பகுதியில் இருந்து சாலை பிரிந்து செல்கிறது.
அவ்வழியாக, ஒருவர் பைக்கில் சென்ற போது, முனீஸ்வரன் கோவில் அருகே புலி சாலை கடந்து சென்றதைப் பார்த்து அச்சமடைந்தார். இதுகுறித்து, தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
அச்சமடைந்த தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நாடுகாணி வனச்சரகர் வீரமணி, வனக்காப்பாளர் அனிஷ் மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வேட்டை தடுப்பு காவலர்கள் ஏற்கனவே பார்த்துள்ளனர்.
காலையில் சென்றது எந்த விலங்கு என்பதை ஆய்வு செய்யப்படும். அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்,'என்றனர்.
