ADDED : ஜன 24, 2026 05:07 AM

குடியேறும் முன்பே சுவரில் ஏற்பட்ட விரிசல் உயிர் பயத்தில் குடிசைக்கு சென்ற பழங்குடிகள்
பந்தலுார்: பந்தலுார் அருகே நெல்லிமாடு, பரிவாரம் பழங்குடியினர் கிராமத்தில், அரசின் தொகுப்பு வீடுகளில், குடியேறும் முன்பே விரிசல் ஏற்பட்டு உள்ளதால், அச்சமடைந்த பழங்குடியின மக்கள் குடிசையிலேயே தங்களின் வாழ்வை தொடர்ந்து வருகின்றனர்.
நீலகிரி பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதன் மூலம், மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக மேம்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியிலும், பழங்குடியினருக்கு அரசால் கட்டப்படும் குடியிருப்புகள் தரமின்றி கட்டப்பட்டு வருவதால், நிதி ஒதுக்கி வீடுகள் கட்டியும் பயன் இல்லாத சூழல் தொடர்கிறது.
அதில், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிமாடு, பரிவாரம் பழங்குடியின கிராமத்தில், மத்திய அரசின் திட்டமான, 'பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் ( பி.எம்., ஜன்மம்)' திட்டத்தின் கீழ், 5.73 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் திட்டம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மிகவும் பின்தங்கிய பழங்குடியினரின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக, பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குடியேறும் முன்பே விரிசல் இந்த திட்டத்தின் கீழ் பரிவாரம் பழங்குடியின கிராமத்தில், 20 வீடுகள் கட்டும் பணி, கடந்த 2023--24ம் நிதியாண்டு துவக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வீடுகள் கட்டும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இப் பணிகள் நிறைவு பெற்ற வீடுகளின் சுவர்கள், விரிசல் அடைந்து, சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து வருகிறது. மேலும், கழிப்பிட பணிகளும் நிறைவு பெறாமல் விடப்பட்டு உள்ளது. வீடுகளில் பழங்குடிகள் குடியேறும் முன்னரே குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
குடிசையில் வசிக்கும் மக்கள் இதனால், இப்பகுதி மக்கள் தற்போதும், பாதுகாப்பற்ற குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டும், தரமற்ற பணி குறித்து அதிகாரிகளிடம், மக்கள் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவர் கூறுகையில், ''பழங்குடியின மக்களான எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் அதனை முறையாக செலவிடுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் விருப்பம் போல் பணிகளை மேற்கொள்வதால், எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி விரயமாக்கப்பட்டு வருகிறது.
எங்கள் கிராமத்தில் வீடுகள் கட்டும் பணி தரமற்ற முறையில் உள்ளதுடன், நடைபாதை, குடிநீர், தடுப்பு சுவர் என எந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எங்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை,'' என்றார்.
ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''இது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

