sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி முழுதும் வெளுத்து வாங்கிய மழை; மண் சரிவில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

/

நீலகிரி முழுதும் வெளுத்து வாங்கிய மழை; மண் சரிவில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

நீலகிரி முழுதும் வெளுத்து வாங்கிய மழை; மண் சரிவில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

நீலகிரி முழுதும் வெளுத்து வாங்கிய மழை; மண் சரிவில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன


ADDED : மே 27, 2025 04:28 AM

Google News

ADDED : மே 27, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டு, பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

நீலகிரி மாவட்டம் முழுதும் கன மழை பெய்து வருகிறது. அதில், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார், குன்னுார் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில், 43 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

எம்.பாலாடா, கப்பதொரை, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில், 100 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. கூடலுார், பந்தலுாரில், 300 வாழைகள் பலத்த காற்றுக்கு சேதமானது. ஊட்டி,- மஞ்சூர், இத்தலார், எமரால்டு, பிக்கட்டி, அவலாஞ்சி சாலைகளில், 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. மழைக்கு, நான்கு வீடுகள் சேதமாகின.

மின் தடை

மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் ஊட்டி, பாலகொலா, எமரால்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.

ஊட்டி, லவ்டேல் உட்பட பெரும்பாலான இடங்களில், நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மழையால் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குன்னுார் கேத்தி போலீஸ் ஸ்டேஷன் கட்டட கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், காற்றுடன் கன மழை பெய்ததால், யூகலிப்டஸ் மரம் ஒன்று கட்டடத்தின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டது.

மசினகுடி - ஊட்டி சாலையில் கல்லட்டி பகுதியில் பாறை விழுந்து இரு இடங்களில் சாலை சேதமடைந்ததால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள், வருவாய் துறையினரை அணுகி அருகில் உள்ள நிவாரண முகங்களில் தங்கலாம்,'' என்றார்.

கேரளாவில் கனமழை பெய்வதால், முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,648 கன அடியாக அதிகரித்தது. இரண்டு நாட்களில், ஒரு அடி உயர்ந்து, 115.65 அடியை எட்டியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், பருவமழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பாபநாசம் மலைப்பகுதியில், 3.9 செ.மீ., மழை பதிவானது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணியர், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்கிறது. அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில், 3.6 செ.மீ., மழை பதிவானது. குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உட்பட, அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் வன கிராமங்கள் உள்ளன.

இவற்றில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள மக்கள், மாயாற்றில் நீர் குறைவாக செல்லும் சமயங்களில் நடந்தே ஆற்றை கடந்து செல்கின்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் பரிசலில் பயணிக்கின்றனர்.

தடை விதிப்பு



சில நாட்களாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறிப்பாய்கிறது.

இதன் காரணமாக வன கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர். வெள்ளப்பெருக்கால் வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரிசல் மூலம் ஆற்றை கடக்கவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தும், வேறு வழியில்லாத நிலையில், மக்கள் விதி மீறி பயணிப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்கு தீர்வாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

2,000 ஏக்கர் எள் செடிகளை அழிக்க விவசாயிகள் திட்டம்


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியான அந்தணர்குறிச்சி, தில்லை ஸ்தானம், பெரும்புலியூர், சாத்தனுார், அச்சனுார், புனவாசல், விளாங்குடி, செம்மங்குடி, அணைக்குடி, காருக்குடியில், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில், எள் சாகுபடி செய்திருந்தனர்.அறுவடைக்கு, 10 நாட்கள் உள்ள நிலையில், மழையால், எள் பயிர் வயல்களில் மழை நீர் சூழ்ந்தது. பின், வெயில் இல்லாமல் தண்ணீர் வடியவில்லை.எள் செடிகள் வேர் அறுந்து, காய்கள் வீணாகி, மகசூல் பாதிப்பு ஏற்பட்டது.எள் செடிகளை வயலிலேயே மடக்கி, உழவு செய்து, குறுவை நெல் சாகுபடியை துவங்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. திருவையாறு பகுதிகளில், கோடை பயிரான உளுந்து, கடலை, எள் உள்ளிட்டவை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இதில், அறுவடைக்கு தயாராக இருந்த எள் பயிர்கள், 2,000 ஏக்கரில் சேதம் அடைந்துள்ளது. செலவு செய்த காசு கூட மிஞ்சவில்லை. வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.








      Dinamalar
      Follow us