/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 2வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடல்
/
ஊட்டியில் 2வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடல்
ADDED : ஜூன் 18, 2025 12:27 AM

ஊட்டி; ஊட்டியில் நிலவும் அசாதாரண சூழலால் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை கருதி இரண்டாவது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 24 மணி நேரப்படி, அவலாஞ்சியில் 25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் ஊட்டியில் சாரல் மழை பெய்து வருகிறது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சொற்ப அளவிலான சுற்றுலா பயணியர் வெம்மை ஆடைகளை அணிந்து இயற்கை காட்சிகளை ரசித்தனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி சூழல் சுற்றுலா, பைன் சோலை, ஷூட்டிங் மட்டம் உட்பட அனைத்து தலங்களும் இரண்டாவது நாளாக மூடப்பட்டன. சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
மரங்கள் விழுந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் உடனுக்குடன் சென்று, மரத்தை அறுத்து அகற்றினர். கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளது. தேயிலை, மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.