/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா மாவட்டம்: பயணிகள் திண்டாட்டம்!
/
சுற்றுலா மாவட்டம்: பயணிகள் திண்டாட்டம்!
ADDED : ஆக 13, 2025 08:42 PM

நீலகிரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், ஊட்டி- -குன்னுார் சாலை; ஊட்டி-- கோத்தகிரி; ஊட்டி- மஞ்சூர்; குன்னுார் - மஞ்சூர்; கூடலுார்- மைசூர்; மேட்டுப்பாளையம்-- குன்னுார்; பந்தலுார்- -சுல்தான்பத்தேரி சாலை,' என, 1,170 கி.மீ., துார சாலை உள்ளது. அதில், பர்லியார்- கக்கனல்லா வரை, 108 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலைகள்; சிறு பாலங்கள்; மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்படுகின்றன. தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை போன்ற இயற்கை பேரிடர்களின் போது சாலை போக்குவரத்தை சீராக வைத்திருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதை தவிர, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சேதம்; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, மாநில நெடுஞ்சாலை துறையின் ஒத்துழைப்புடன், இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள், நிதி ஒதுக்கீட்டை பொறுத்து சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மலை மாவட்ட சாலைகளில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு, உள்ளூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
35 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வரும் நிலையில், நுழைவு வரி; பசுமை வரி கொடுத்து வரும் தனியார் வாகனங்கள், மலை பாதைகளில் சாலை சேதம் ஏற்பட்ட பகுதிகளில் செல்லும் போது, தடம் மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சில வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு விபத்துக்கு உள்ளாகும் நிலையும் தொடர்கிறது. சாலை சேதம் அடைந்த சில பகுதிகளில், தற்காலிக பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலையினர், சுற்றுலா மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி, தரமான முறையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது, உள்ளூர் மக்கள்; சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது.
முன்று மாநில சந்திப்பில் சிரமம் இந்நிலையில், 3 மாநிலங்களை இணைக்கும், கூடலுார், பந்தலுார் சாலைகளில், பெரும்பாலான பகுதிகள் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக ஆண்டுதோறும் வரும், கர்நாடகா, கேரளா உட்பட பிற பகுதிகளின் சுற்றுலா வாகனங்கள் பெரும் சிரமப்பட்டு, பயணிகளின் அதிருப்தி அடையும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது.
மேலும், உள்ளூரில் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளை கொண்டு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் வி.ஐ.பி.,க்கள் வரும் போது மட்டும், குறிப்பிட்ட இடங்களில் தற்காலிக பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள், உள்ளூர் மக்கள் நிம்மதியாக பயணிக்க தரமான சாலை பணிகள் மேற்கொள்வதில், ஆர்வம் காட்டுவதில்லை.
--பந்தலுார் பந்தலுார் குந்தலாடி, உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு; தமிழக எல்லை பகுதியான பாட்டவயல்; அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு மற்றும் நெலாக்கோட்டை, கூடலுார் பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் குந்தலாடி மற்றும் பெக்கி ஆகிய இடங்களில், பெரும் சேதம் ஏற்பட்டு குழியாக மாறி உள்ளது. மேலும், சாலையின் நடுவில் உள்ள சிறுபாலம் சேதமடையும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க உள்ளூர் மக்கள் வலியுறுத்தியும் மழையை காரணம் காட்டி பணியில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது.
கூடலுார், செம்பாலா பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகர், ஈட்டி மூலா, ஆனசெத்தகொல்லி வழியாக செல்லும் சாலை, முதல் மைல் அருகே தேவர்சோலை சாலையுடன் இணைகிறது. இச் சாலையை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, கேரளாவில் மலப்புரம் -வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி சென்று வரவும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்து வரும் பருவமழையில், மழைநீர்குளம் போல் தேங்கி, சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. அதில், வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், 1,170 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் ஏற்படும் சேதத்தை அவ்வப்போது சீரமைத்து, சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மலைப்பகுதி என்பதால், 80 சதவீதம் சாலைகளில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடலுார், பந்தலுார் உட்பட பிற இடங்களில், மீதமுள்ள பகுதிகளை ஆய்வு செய்து, மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
-நிருபர் குழு--