ADDED : செப் 07, 2026 09:16 PM

பந்தலுார்: முதுமலை புலிகள் காப்பக சாலையை கடக்கும் யானைகள் முன்பாக, சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் மற்றும் மசினகுடி, தெப்பக்காடு ஆகிய சாலை ஓரங்களில், யானை, புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படும். இவற்றை பார்த்து ரசித்து செல்ல வரும் சுற்றுலா பயணிகளை, சுற்றுலா வாகன டிரைவர்கள் குறிப்பிட்ட சாலைகள் வழியாக அழைத்து செல்கின்றனர்.
சாலை ஓரங்கள் மற்றும் சாலையை கடக்கும், வன விலங்குகளை சுற்றுலா பயணிகளிடம் காட்டியபின், சில வாகன ஓட்டிகள் வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தம் செயல் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை மசினகுடி–-தெப்பக்காடு சாலையை கடக்க முயன்ற, யானையின் முன்பாக போட்டி போட்டு தங்கள் வாகனங்களை கொண்டு போய் நிறுத்தினர். சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை அருகே சென்று பார்க்கும் போது மகிழ்ச்சி அடைந்தாலும், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு வனத்துறை பொறுப்பேற்கும் சூழல் உருவாகிறது.
எனவே, வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில், சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
