/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் வரும்... வேட்டை கும்பல்! சோதனை பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு
/
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் வரும்... வேட்டை கும்பல்! சோதனை பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் வரும்... வேட்டை கும்பல்! சோதனை பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் வரும்... வேட்டை கும்பல்! சோதனை பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு
ADDED : மே 07, 2025 01:43 AM

கூடலுார்: ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் போர்வையில் வரும், கேரள வேட்டை கும்பலை பிடிக்க, மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில், தீவிர வாகன சோதனை நடந்து வருவதுடன், இந்த பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக, கேரளாவை சேர்ந்த வேட்டை கும்பல், வாகனங்களில் கள்ள துப்பாக்கியுடன் வந்து, வன விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனினும், இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
கேரளா வேட்டை கும்பல் கூடலுார், மஞ்சூர் முள்ளி வழியாக துப்பாக்கி மற்றும் வாகனங்களுடன், ஊட்டிக்குள் நுழைந்து, காட்டெருமையை வேட்டையாடி வருவது தொடர்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட, கேரளா வேட்டை கும்பலை சில மாதங்களுக்கு முன், வனத்துறையினர் கைது செய்து நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இரு நாட்களுக்கு முன்பு, ஊட்டி கப்பத்தொறை பகுதியில், நாட்டு துப்பாக்கியால் சுட்டு, காட்டெருமை வேட்டையாடிய, கேரளா வழிகடவு பகுதியை சேர்ந்த அனீஷ் மோன், நிஷார் ஆகியோரை நீலகிரி வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள், மஞ்சூர் முள்ளி வழியாக, ஊட்டிக்கு வந்தது தெரிய வந்தது.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'தற்போது, கோடை சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாபயணிகள் போர்வையில், நாட்டு துப்பாக்கிகளுடன் வரும் வேட்டை கும்பல், ஊட்டி காட்டேஜ்களில் தங்கி, காட்டெருமையை வேட்டையாடிய பின்பு, அவற்றை வேறு வாகனங்களில் கேரளா கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். துப்பாக்கிகளுடன் வரும் போது, சோதனை சாவடி பணியில், தொய்வு ஏற்படுவதால், விலங்குகள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இந்நிலையில், 'கர்நாடக - கேரள எல்லையில், நாடுகாணி, கக்கனல்லா பகுதிகளில், வனத்துறையின் தொடர் கண்காணிப்பு காரணமாக, கேரளா வேட்டை கும்பல் கூடலுார் வழியாக, நீலகிரிக்குள் நுழைவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது,' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

