/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்: இரு நாட்கள் கடும் வாகன நெரிசல்
/
படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்: இரு நாட்கள் கடும் வாகன நெரிசல்
படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்: இரு நாட்கள் கடும் வாகன நெரிசல்
படகு இல்லத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்: இரு நாட்கள் கடும் வாகன நெரிசல்
ADDED : நவ 09, 2025 10:07 PM

ஊட்டி: ஊட்டியில் கடந்த இருநாட்களில் திரண்ட சுற்றுலா பயணிகளால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டியில் உள்ள சிறந்த சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க சாதாரண நாட்களிலும் கூட, 5,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர், தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக, படகு இல்லத்திற்கு சென்று, இயற்கை காட்சிகளை கண்டு களிப்பதுடன், படகு சவாரி செய்வதை விரும்புகின்றனர். பயணியரை மகிழ்விக்க ஏதுவாக, படகு இல்ல நிர்வாகம், மோட்டார், துடுப்பு படகுகள் என, 100க்கும் மேற்பட்ட படகுகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில், விடுமுறை நாளான கடந்த இரு நாட்களில், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உட்பட, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு என சமவெளி பகுதியில் இருந்து, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் குவிந்தனர்.
வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும்,இதமான காலநிலை நிலவியதால் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் படகு சவாரி செய்து, குதுாகலம் அடைந்தனர்.
ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், மத்திய பஸ் நிலையம், படகு இல்ல சாலை, எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, ரோஜா பூங்கா சாலை உட்பட, முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, ஊட்டி படகு இல்லம் சாலையில் போதிய போலீசார் பணியில் இல்லாத நிலையில், சுற்றுலா வழிகாட்டிகள் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வாகனங்கள்; அரசு பஸ்களில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

