ADDED : ஆக 29, 2025 09:06 PM
பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இருந்து கோழிக்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தாமரைச்சேரி அமைந்துள்ளது.
கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலையில், லெக்கிடி என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் நின்று சாலை மற்றும் வளங்களின் அழகை ரசிப்பது வழக்கம்.
இந்த சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொக்லைன் உதவியுடன், பாறைகள் உடைக்கப்பட்டது. மறு நாள் சிறிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் இந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டதால், மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால், தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், பந்தலுார், நாடுகாணி, நிலம்பூர் வழியாக கோழிக்கோடு பகுதிக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை முதல் சிறிய வாகனங்கள் மட்டும் அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டன.

