/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் 'கம்போடியா' வன அதிகாரிகளுக்கு பயிற்சி
/
முதுமலையில் 'கம்போடியா' வன அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : மே 18, 2025 10:03 PM
கூடலுார், ; 'புலிகள் காப்பகம் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு,' குறித்து, கம்போடியா வன அதிகாரிகளுக்கு முதுமலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், குட்டி யானைகள் அதன் பாகன்கள் இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்துக்கு, 2023ல் சிறந்த ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
இதனை தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் உலகளவில் பிரபலமானது. பல்வேறு பகுதிகளில் உள்ள வன அதிகாரிகள், இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கம்போடியா நாட்டை சேர்ந்த, 16 வன அதிகாரிகள், முதுமலை புலிகள் காப்பகத்தில், வன பாதுகாப்பு, வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து தெப்பக்காடு யானைகள் முகாமில், 16ம் தேதி முதல் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
பயிற்சி முகாமை, தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராஜேஷ்குமார் டோக்கரா துவக்கி வைத்து பேசினார். தேசிய புலிகள் காப்பகம் ஆணையத்தின் தென் மண்டல ஐ.ஜி., சஞ்சயன் குமார், ஏ.ஐ.ஜி., ஹரிணி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், துணை இயக்குனர் வித்யா ஆகியோர் புலிகள் காப்பகம், வளர்ப்பு யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, வனப்பகுதியில் உள்ள வேட்டை தடுக்கும் முகாம்கள், வனவிலங்குகளுக்கான நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகள் நேரில் அழைத்துச் சென்று, வன ஊழியர்களின் செயல்பாடுகள், நீர் மேலாண்மை, கோடையில் வனத் தீ தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி முகாம், 6 நாட்கள் நடக்கிறது.
வனத்துறையினர் கூறுகையில், ' நம் நாட்டை தொடர்ந்து, வெளிநாட்டை சேர்ந்த வன அதிகாரிகள் இங்கு வந்து பயிற்சி பெற்று வருவதன் மூலம், முதுமலை புலிகள் காப்பகம் உலக அளவில் நம் நாட்டுக்கும், மாநிலத்திலுக்கு பெருமை சேர்த்துள்ளது,' என்றனர்.