/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர வனங்களில் அருவிகளை ரசிக்கும் பயணிகள்
/
சாலையோர வனங்களில் அருவிகளை ரசிக்கும் பயணிகள்
ADDED : ஜூலை 11, 2025 11:12 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே வனப்பகுதிகளில் மழையால் காணப்படும் சாலையோர அருவிகளை பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சதுப்பு நிலங்களில் அதிக அளவில் நீர் ஊற்றுகள் உருவாகி, கிணறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அத்துடன் கோடை வெயிலில் காய்ந்து காணப்பட்ட வனப்பகுதிகள், தோட்டங்கள் பசுமைக்கு மாறி காட்சி தருகிறது.
இந்நிலையில், பந்தலுாரில் இருந்து கூடலுார் மற்றும் மலப்புரம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில், நீர்மட்டம் பகுதியில் அருவிகள் உருவாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. சாலையில் இரண்டு பகுதியிலும் வனப்பகுதி அமைந்துள்ள நிலையில், சாலையின் மேல் பகுதியில் உள்ள மலையில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர், அருவியாக மாறி கொட்டி வருகிறது. இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், ரசித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,''தண்ணீரில் அதிக அளவில் அட்டைப்பூச்சிகள் இருப்பதால், தண்ணீரில் இறங்கி ரசிப்பதை பயணிகள் தவிர்க்க வேண்டும்; மலை உச்சியில் இருந்து வேகமாக வரும் தண்ணீருடன் சிறு பாறைகளும் உண்டு வரும் என்பதால், இந்தப் பகுதியில் கவனத்துடன் நின்று ரசிக்க வேண்டும்.
இரவு நேரங்களில் இப்பகுதியில் யானை மற்றும் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வரும் நிலையில், இரவில் இப்பகுதியில் நிற்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

