/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்ணாய் போகுது மரம்: யாருக்கு என்ன லாபம்...? புதரில் புதைவதால் அரசு துறைகளுக்கு நஷ்டம்
/
மண்ணாய் போகுது மரம்: யாருக்கு என்ன லாபம்...? புதரில் புதைவதால் அரசு துறைகளுக்கு நஷ்டம்
மண்ணாய் போகுது மரம்: யாருக்கு என்ன லாபம்...? புதரில் புதைவதால் அரசு துறைகளுக்கு நஷ்டம்
மண்ணாய் போகுது மரம்: யாருக்கு என்ன லாபம்...? புதரில் புதைவதால் அரசு துறைகளுக்கு நஷ்டம்
ADDED : ஜூலை 16, 2025 07:46 PM

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் காற்றுடன் மழை பெய்யும் போது, பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அடியோடு சாயும் மரங்கள் மற்றும் மர கிளைகள், வருவாய்த்துறை கண்காணிப்புடன், வனத்துறை வாயிலாக அகற்றப்பட்டு, அந்தந்த வனச்சரக அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
இதை தவிர, மக்கள் வாழும் பகுதிகளில் விழும் நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வனத்துறை; வருவாய் துறை ஆய்வுக்குபின் வெட்டப்படுகின்றன.
இவைகளும் மர வியாபாரிகளுக்கு ஏலம் விடுவதற்காக வைக்கப்படுகின்றன. இதை தவிர, மரக்கடத்தல் நடக்கும் போது வனத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும் மரங்களும் வனத்துறை மற்றும் பிற அரசு அலுவலகங்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன.
ஈட்டி மரத்துக்கு பாதுகாப்பு
அதில், ஈட்டி மற்றும் தேக்கு மரங்கள் பாதுகாப்பு பட்டியலில் உள்ளதால் இவற்றை பாதுகாப்பது முக்கிய பணியாக உள்ளது. அதில், வெட்டி கடத்த முற்படும் ஈட்டி மரங்களின், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அந்தந்த வன அலுவலர்கள் மூலம், அபராதம் விதிக்கப்பட்டு மரங்களை பறிமுதல் செய்து பாதுகாக்கப்படுகிறது.
10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு வரும் ஈட்டி மரங்கள் வைக்கப்பட்டு, நீதிமன்ற வழக்குகள் வாயிலாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மரங்கள் வழக்கிற்கு உட்பட்டதாக இருந்தால் வழக்கு முடிந்த பின்னரும், மற்ற மரங்கள் சாதாரணமாகவும் அந்தந்த வன அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும்.
இந்நிலையில், நீலகிரியில் பெரும்பாலான வனச்சரக அலுவலகங்களில், அதிக அளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரங்கள் பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாததால், கரையான்கள் அரித்து மண்ணோடு, மண்ணாகி மக்கி வருகின்றன.
அதில், மாவட்டத்தில், சேரம்பாடி மற்றும் பிதர்காடு உள்ளிட்ட வனச்சரகங்களில் கடந்த பல ஆண்டுகளாக, இது போன்ற மரத்துண்டுகள் அலுவலக வளாகங்களில் அடுக்கி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது.
வாகனங்களை நிறுத்த கூட இடம் இல்லாத நிலையில், அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரத்துண்டுகள் கரையான்களால் அழிக்கப்பட்டு வீணாகி வருகிறது. வழக்கு நிலுவையில் உள்ள மரங்கள் தவிர்த்து, பிற மரங்களை ஏலம் விட்டால் வனத்துறைக்கு வருவாய் கிடைப்பதுடன், வனச்சரக அலுவலகங்களிலும் பிற பணிகளுக்கான விசாலமான இடம் கிடைக்கும். ஆனால், இதற்கான நடவடிக்கையில் தொடரும் தாமதத்தால் யாருக்கும் எவ்வித பயனும் கிடைக்காத சூழ்நிலை தொடர்கிறது.
மரம் கடத்தல் கும்பலால் சிக்கல்
கூடலுார் பகுதி, பட்டா நிலங்களைத்தவிர, வருவாய் துறைக்கு சொந்தமான அரசு நிலங்கள், வன நிலங்கள், செக்சன்- 17 உள்ளிட்ட பல வகைப்பாடு கொண்ட நிலங்களை கொண்டுள்ளது. பட்டா நிலங்களில் உள்ள மரங்கள் வெட்ட, மாவட்ட கமிட்டியிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். பட்டா நிலங்களைத் தவிர, பிற நிலங்களில் உள்ள மரம் வெட்ட அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதனால், இந்த நிலங்களில் உள்ள விலை உயர்ந்த மரங்களை, மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடும் கடத்தல் கும்பல் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சில அதிகாரிகள் உதவியுடன் வெட்டி கடத்தும் சம்பவங்களும் தொடர்கிறது.
இவ்வாறு, கடத்த முயற்சிக்கும் பல மரங்களை, வனத்துறை பறிமுதல் செய்து, தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று வனப்பகுதிகளில் வெட்டி கடத்த முயன்ற மரங்களை வனத்துறையினர் அவ்வப்போது பறிமுதல் செய்து பலரை கைது செய்துள்ளனர். இவைகள் தொடர்பான பல வழக்குகள், மாவட்டத்தில் உள்ள சில நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. வழக்குகள் முடியும் வரை பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள், வழக்கு பதிவு செய்யப்பட்ட அரசு துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.
குடோன் வசதிகள் இல்லை
இந்த மரங்களை, பாதுகாப்பாக வைக்க குடோன் வசதி இல்லாததால், தங்கள் அலுவலகங்கள் அருகே உள்ள, திறந்தவெளியில் மரங்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர். இவைகள் பல ஆண்டுகள் மழை, வெயிலில் திறந்தவெளியில் கிடப்பதால், அவை பயனற்று போகும் சூழல் உள்ளது.
இதனை தவிர்க்க, வழக்கு முடியும் வரை மரங்களை பாதுகாக்க குடோன் வசதி செய்து தரப்பட வேண்டும். அல்லது கோர்ட் உத்தரவு பெற்று, ஏலம் விட்டு அத்தொகையை, கருவூலத்தில் 'டெபாசிட்' செய்ய வேண்டும்.
வழக்கு முடிந்த பின், அந்த டெபாசிட் தொகையை கோர்ட்டு உத்தரவுப்படி, யார் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யலாம். வழக்கில், அரசுக்கு சாதகமாக வரும் தீர்ப்புகளில், அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கான மாற்றங்களை அரசு மேற்கொண்டால் பயன் ஏற்படும்.
மாவட்டத்தின் பல இடங்களில் மழை காலங்களில் கீழே விழும் மரங்கள் முழுமையாக அகற்றாமல் அதே பகுதிகளில் விட்டு செல்லப்படுகின்றன. மரக்கடத்தலால் பறிமுதல் செய்த மரங்கள் குன்னுார் ஆர்.டிஓ., அலுவலகம் அருகே வைக்கப்பட்டு எந்தவித டென்டரும். விடாமல் வீணாகி புதர்கள் சூழ்ந்து மண்ணோடு மண்ணாகி வருகிறது.
-நிருபர் குழு----