'ஊட்டியில் டிரிபிள் இன்ஜின் செயல்பாடு' :சட்டசபை தொகுதி பா.ஜ., வேட்பாளர் உறுதி
'ஊட்டியில் டிரிபிள் இன்ஜின் செயல்பாடு' :சட்டசபை தொகுதி பா.ஜ., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 20, 2026 08:39 PM

ஊட்டி: 'டிரிபிள் இன்ஜினாக அரசு செயல்பட, தாமரை சின்னத்திற்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்,' என, பாஜ., வேட்பாளர் போஜராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.
ஊட்டி சட்டசபை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போஜராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு அமைச்சர்கள், பிற கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, பிரபல 'டிவி' நடிகர்கள் ராஜ்காந்த், தேவ் ஆனந்த், சிவக்குமார், இந்திரன், கிரண், ரவி, நடிகைகள் தேவானந்த் அம்மு தனலட்சுமி ஹேமா, அனிதா, தீபா நேத்ரன், சுஜி, உட்பட பலரும் வீடுகள் தோறும் சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.
' மக்களுடன் மக்களாக' என்ற அணுகுமுறையில் நடந்த இந்த பிரசாரத்தில் பொதுமக்களுடன் உரையாடி குறைகள் மற்றும் தேவைகளை கேட்டு அறிந்து, மத்திய அரசின் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்தனர். நேற்று கிழக்கு மண்டல தொகுதியில் டி. மணியட்டி, சம்பட்டி, பரலட்டி, மோரிகல் தும்மனாடா, கெந்தொரை, குந்த சப்பை, கப்பச்சி உட்பட பல்வேறு கிராமங்களில் பா.ஜ. வேட்பாளர் போஜராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.
படுக மொழியில் அவர் பேசியதாவது :
ஒரு மாநிலம் வளர வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் என டபுள் இன்ஜின் அரசுக்கு தேவை. ஆனால் நமக்கு இப்போது 'டிரிபிள் இன்ஜின்' தேவைப்படுகிறது. 'மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி , மாநிலத்தில் மீண்டும் பழனிச்சாமி ஆட்சி மற்றும் உங்கள் குறைகளை தீர்க்க உங்கள் பிரதிநிதியாக உள்ள நான்,' என, மூன்று தரப்பும் இணையும் போது, நமது பகுதிக்கு முழுமையான வளர்ச்சி கிடைக்கும்.
பிரதமரின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் குழாயை மட்டும் பொருத்திவிட்டு சென்று விட்டது. மத்திய அரசின் பணத்தில் நடக்கும் திட்டங்களுக்கு இவர்கள் 'லேபிள் ஒட்டி' உரிமை கொண்டாடுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வெற்றி வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும், தி.மு.க., வை இனியும் நம்பக் கூடாது. உங்களுக்காக எப்போதும் உழைக்க கூடிய ஒருவனாக இருப்பேன். ஓட்டு இயந்திரத்தில் முதலில் உள்ள தாமரை சின்னத்தில் ஓட்டளியுங்கள். கிராமங்களில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
