/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீயணைப்பு நிலையத்தை மாற்றம் செய்வதில் சிக்கல்
/
தீயணைப்பு நிலையத்தை மாற்றம் செய்வதில் சிக்கல்
ADDED : டிச 12, 2024 09:46 PM

குன்னுார்; குன்னுாரில் இருந்து பாரதியார் மண்டபத்திற்கு தீயணைப்பு நிலையத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, வாடகை பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறி, தி.மு.க., சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க., ஆட்சி வந்த பிறகு இதற்கு தீர்வு காணாத நிலையில், வாடகை உயர்த்தப்பட்டது.
இதில், '2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில், மறு மதிப்பீடு செய்த வாடகை நிலுவை தொகையை செலுத்தவும்; 2019 முதல் 2022 வரையில், 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு செலுத்தவும் உத்தரவிட்டு, நகராட்சி வசூல் செய்து வருகிறது.
ரூ, 41.50 கோடியில் கட்டுமானம்
தற்போது, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பார்க்கிங் வசதியுடன் மார்க்கெட் கடைகள் கட்ட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கடைகள் வாடகை நிலுவை தொகை முழுவதும் செலுத்திய வியாபாரிகளுக்கு 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்து கடைகள் வழங்குவதாகவும் நகராட்சி தெரிவிக்கிறது.
மேலும், 1.37 கோடி ரூபாய் ஒதுக்கி, பழைய கடைகள் இடிக்கவும் முடிவு செய்த நகராட்சி, தற்காலிக கடைகளை அமைக்க, உழவர் சந்தை, தீயணைப்பு நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட், பார்க்கிங் இடங்களை தேர்வு செய்துள்ளது.அதில், தீயணைப்பு துறை உள்ள இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து, தீயணைப்பு துறையை பாரதியார் மண்டபத்திற்கு மாற்ற நகராட்சி பரிந்துரைத்துள்ளது.
தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'பள்ளிகள், தேவாலய பகுதிகளுக்கு அருகே உள்ள பாரதியார் மண்டபம் செல்லும் சாலை மிகவும் குறுகலான மற்றும் மேடான சாலையில் உள்ள நிலையில், தீயணைப்பு கனரக வாகனங்கள், தீ விபத்து நேரங்களில் உடனடியாக செல்ல முடியாது என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தீயணைப்பு துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வுக்கு செய்த பிறகு, இதன் இறுதி முடிவு தெரிய வரும்,' என்றனர்.

