ADDED : ஏப் 09, 2025 10:00 PM
கூடலுார்; மசினகுடி, சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புகாட்டில், அனுமதி இன்றி கற்பூர மரம் வெட்டியதாக, வனத்துறையினர் இருவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
சோலுார் கிராமம், மணிக்கல் மேய்ச்சல் நிலப்பகுதியில் உள்ள, கற்பூர மரங்களை முறையான அனுமதி பெற்று வெட்டும் பணியை சிலர் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் உத்தரவுபடி, சிங்கார வனவர் மோகன்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், மேய்ச்சல் நிலத்தை ஒட்டி, வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் இருந்த கற்பூர மரங்களை சிலர் அனுமதியின்றி வெட்டியது தெரிய வந்தது.
இது தொடர்பாக, லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர், அதன் உரிமையாளர் பிரவித்குமார், 50, சோலுாரை சேர்ந்த ஒப்பந்தத மேற்பார்வையாளர் சண்முகவேல், 43, ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

