/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.3.25 லட்சம் 'சரக்கு' திருடிய இருவர் கைது
/
ரூ.3.25 லட்சம் 'சரக்கு' திருடிய இருவர் கைது
ADDED : செப் 08, 2025 09:35 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, மதுக்கடையில் 3.25 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு மதுக்கடை செயல்படுகிறது. இங்கு, கடந்த 5ம் தேதி இரவு, ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த ஊழியர்கள், சுவரில் ஓட்டை போட்டு மதுபாட்டில்கள் திருட்டப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. அதில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். விசாரணையில், ஓணம் பண்டிகையையொட்டி இருப்பு வைத்திருந்த மதுபானங்களை குறிவைத்து திருடிய, அப்பகுதியைச் சேர்ந்த முரளீதரன், 51, நென்மேனி பகுதியைச் சேர்ந்த ரவி, 53, ஆகியோர் என்பது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு, பதுக்கி வைத்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.