/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரு தடுப்பணைக்கு இரண்டு பில்கள்; விசாரணை நடத்த கிராம சபையில் புகார்
/
ஒரு தடுப்பணைக்கு இரண்டு பில்கள்; விசாரணை நடத்த கிராம சபையில் புகார்
ஒரு தடுப்பணைக்கு இரண்டு பில்கள்; விசாரணை நடத்த கிராம சபையில் புகார்
ஒரு தடுப்பணைக்கு இரண்டு பில்கள்; விசாரணை நடத்த கிராம சபையில் புகார்
ADDED : மே 01, 2025 11:19 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் ஒரு தடுப்பணைக்கு இரண்டு பில்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது.
நெலாக்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம், விலங்கூர் அரசு பள்ளி வளாகத்தில் நடந்தது. பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ் பாண்டியன் தலைமை வகித்தார்.
அதில், ஊராட்சி திட்டங்கள் குறித்து ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் பேசினார். விலங்கூர் பகுதியில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்வதாக மாசடைந்த தண்ணீருடன் மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், பாதியில் நிற்கும் சாலை பணியை நிறைவு செய்யவும், தெருநாய்கள் தொல்லையால் காலை நேரத்தில் மதரஸா செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 'ராக்வுட் மற்றும் பாக்கனா பகுதியில் ஏற்கனவே கட்டி பில் வழங்கப்பட்ட, இரண்டு தடுப்பணைகளுக்கு வர்ணம் பூசி புதிதாக கட்டியதாக கூறி, பில் வழங்கப்பட்டுள்ளது, கிணறுகள் துார் வாரியதில் முறைகேடு நடந்துள்ளது,' குறித்து விசாரணை நடத்த சமூக ஆர்வலர் சங்கீதா வலியுறுத்தினார்.
இதை தவிர, 'பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டெர்மிளா, 10 அடி அகலமுள்ள நடைபாதையை, ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கவும்; கிராமத்திற்கு செல்லும் தார் சாலையை பெயர்த்து எடுத்து பல மாதங்கள் கடந்தும் சீரமைக்காதது,' குறித்து சமூக ஆர்வலர் கார்த்திக் கேள்வி எழுப்பினார்.
'இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வி.ஏ.ஓ., மாரிமுத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தனர்.
'பள்ளி வளாகத்தில் பாதியில் நிற்கும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணியை தரமாக மேற்கொள்ளவும், புதிய சமையலறைக்கு மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
இதில், வனவர் சுதீர்குமார், போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், மின்வாரிய உதவியாளர் சிவபாலன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், மகளிர் குழு நிர்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

