ADDED : ஜன 18, 2024 01:50 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே பஸ் விபத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி என்ற இடத்தில், கடந்த, 15 ஆம் தேதி இரவு, 7:20 மணிக்கு, கூடலுாரில் இருந்து அய்யன்கொல்லி என்ற இடத்திற்கு அரசு பஸ் சென்றது.
எதிரே வந்த பஸ்சிற்கு மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் இடம் கொடுக்க வேண்டி, பஸ்சை சாலை ஓரம் இயக்கியதில், சாலையோர மின் கம்பத்தில் பஸ் மோதியது.
அதில் மின்கம்பத்தின் மேல் பக்க பீங்கான் கம்பியுடன் பஸ் மீது விழுந்ததில், மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் நாகராஜ் மற்றும் பஸ்சில் பயணித்த புஞ்சை கொல்லியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தலா, 2 லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, நேற்று இருவர் குடும்பத்திற்கும் கூடலுார் ஆர்.டி.ஓ. முகமது குதுரத்துல்லா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று, ஆறுதல் கூறியதுடன் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினர்.
அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அருள் கண்ணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., செந்தில் குமார், சப்--இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிட மணி, வி.ஏ.ஓ., அசோக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.