ADDED : மே 16, 2026 03:15 AM

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார், 'ரிச் மவுன்ட்' தனியார் தோட்டம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகளவில் சிறுத்தைகள், இரவு நேரத்தில் உணவு தேடி உலா வரு வது வழக்கம்.
நேற்று காலை, பந்தலுாரில் இருந்து ஊட்டி செல்லும், 'ரிச் மவுன்ட்' சாலையில், இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்து கிடப்பதாக வனச்சரகர் சஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் மற்றும் வனவர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டனர்.
தாயுடன் சிறுத்தை குட்டிகள், சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மோதியதில் , இரண்டு சிறுத்தை குட்டிகளும் உயிரிழந்தது தெரிய வந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'விலங்குகள் அதிகம் உலா வரும் சாலையில் வாகனங்களை மித வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை குட்டிகளின் மீது மோதிய வாகனத்தை கண்டறிந்து, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
