இரு புலி உடல்கள் கண்டெடுப்பு; நீலகிரி வன ஆர்வலர்கள் அதிர்ச்சி
இரு புலி உடல்கள் கண்டெடுப்பு; நீலகிரி வன ஆர்வலர்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 01, 2026 01:10 AM

ஊட்டி: ஊட்டி மார்லிமந்து ஏரி பகுதி, நடுவட்டம் பிராஸ்பெக்ட் எஸ்டேட் பகுதிகளில் இரு புலிகள் இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி வனக்கோட்டம், பைக்காரா வன சரகத்திற்கு உட்பட்ட, நடுவட்டம் காப்புக்காடு லோயர் பிராஸ்பெக்ட் பகுதியில், 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி நேற்று முன்தினம் இறந்து கிடந்தது. மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி ஆய்வு செய்தார்.
நேற்று, முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ், கால்நடை துறை நோய் புலனாய்வு பிரிவு டாக்டர் சுதா, டி.ஆர்., பஜார் அரசு கால்நடை டாக்டர் பிரதீபா ஆகியோர் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதேபோல, ஊட்டி வடக்கு வனச்சரகம் மார்லிமந்து ஏரி பகுதியில் நேற்று மதியம் ஒரு புலியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
வனக்குழுவினர் ஆய்வுக்கு பின், மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இரு புலிகளின் உடல்களும் எரியூட்டப்பட்டன.
வனத்துறையினர் கூறுகையில், 'இரு புலிகளின் உடற்கூறுகள் ஆய்வறிக்கை கிடைத்த பின், தெளிவான விபரம் தெரிய வரும். அதன்பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'ஊட்டி, நடுவட்டம் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி மர்மமான முறையில் புலிகள் இறந்து வருகின்றன.
'புலிகள் இறப்பு குறித்து ஆய்வறிக்கை வந்தவுடன், மக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும். அப்போது தான் உண்மை நிலையை அனைவரும் அறிய முடியும்' என்றனர்.
