5வது நாளாக வேலை நிறுத்தம் : சான்று பெற முடியாமல் தவிப்பு
5வது நாளாக வேலை நிறுத்தம் : சான்று பெற முடியாமல் தவிப்பு
ADDED : பிப் 26, 2024 11:23 PM
அன்னுார்;அன்னுார் தாலுகா அலுவலகத்தில், ஐந்தாவது நாளாக நேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டன.
வருவாய்த்துறையில் உள்ள பல ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கு என தனி வட்டாட்சியர் பணியிடங்களை ஏற் படுத்த வேண்டும்.
2024 லோக்சபா தேர்தல் பணிக்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பிப்., 22ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தது.
இதன்படி அன்னுார் தாலுகா அலுவலகத்தில் ஐந்தாவது நாளாக நேற்று 18 பேர் பணி புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருமான சான்று, சாதிச் சான்று இருப்பிடச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் மனுக்களுடன் அன்னுார் தாலுகா அலுவலகம் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தாசில்தார், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் பணியில் இருந்தனர், அலுவலக உதவியாளர், வாகன ஓட்டுநர், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர். 27ம் தேதி (இன்று) முதல் கால வரையற்ற போராட்டம் நடைபெறும் என வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
